வெள்ளி, 22 நவம்பர், 2019

விண்வெளிக்கு செல்லும் இந்தியர்களுக்கு ரஷ்யாவில் பயிற்சி!


Image
ககன்யான் திட்டத்தின் கீழ் 2022ம் ஆண்டில் விண்வெளிக்கு செல்லும் இந்தியர்களுக்கு ரஷ்யாவில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக மூத்த விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை தெரிவித்துள்ளார்.
சென்னை தனியார் பள்ளியில் இருந்து, ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு சுற்றுலா சென்று வந்த 50 மாணவ, மாணவிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்றது. இதில், மூத்த விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை, இந்தியாவுக்கான ரஷ்ய துணைத்தூதர் அவ்தீப் ஓலக் நிக்கோல்விச், மூத்த பத்திரிகையாளர் என்.ராம் உள்ளிட்டோர், மாணவர்களை வாழ்த்தி பரிசுகளை வழங்கினர். பின்னர் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்த விஞ்ஞானி சிவதாணுப் பிள்ளை ககன்யான் திட்டம் மூலம் விண்வெளிக்கு பயணிக்கவுள்ள 3 இந்தியர்களுக்கு ரஷ்யாவில் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான காஸ்மோஸின் ஒத்துழைப்புடன் ககன்யான் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட உள்ளதாகவும் கூறினார். 
விண்வெளிக்கு முதல் முறை பயணிக்கவிருக்கும் 3 இந்தியர்களின் மூலம், விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா புதிய மைல்கல்லை எட்டும் என்று கூறிய சிவதாணுப்பிள்ளை, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியதில் ரஷ்யாவுக்கு நல்ல அனுபவம் இருப்பதால், ககன்யான் திட்டத்துக்கு ரஷ்யாவின் உதவியை இந்தியா நாடியுள்ளதாக தெரிவித்தார். ககன்யான் திட்டத்தில் இஸ்ரோவுடன் இணைந்து நாட்டின் அனைத்து அறிவியல், தொழில்நுட்பத்துறைகளும் தீவிரமாக உழைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

credit ns7.tv