நெல்லை மாவட்டம் பணகுடியில் தள ஓடு தயாரிப்பு தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மணல் அள்ளுவதற்கு அரசு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நெல்லை மாவட்டம் மண் மற்றும் நீர் வளம் மிக்க பகுதியாக விளங்கி வருகிறது. குறிப்பாக, ராதாபுரம் மற்றும் பணகுடி பகுதியில் அதிகளவு குளங்கள் உள்ளதால் மண் வளங்கள் மிகுந்து காணப்படுகிறது. இதனால் பணகுடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செங்கல் மற்றும் தளஓடு தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன. இந்த தொழிற்சாலைகளின் மூலம் இப்பகுதி மக்களும் வேலைவாய்ப்புகளை பெற்றுவருகின்றனர். இங்கு பல்வேறு ரகங்களில் தயாரிக்கப்படும் ஓடுகள் தரம் பிரிக்கப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுவருகிறது.
பணகுடி சுற்றுவட்டாரப் பகுதி குளங்களிலிருந்து வண்டல், குறுமண் மற்றும் களிமண் அள்ளுவதற்கான குத்தகையை அரசு, தனியாருக்கு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தனியாரிடமிருந்து மணலைப் பெறுவதற்கு கூடுதல் பணம் செலவழித்தாலும், கால தாமதம் ஏற்படுவதாக, தளஓடு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
மேலும், தனியாரின் கெடுபிடிகளால் இன்னல்களை சந்திப்பதாக கூறும் உற்பத்தியாளர்கள், மணல் அள்ளுவதற்கு அரசு தங்களுக்கு நேரடி அனுமதி வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். மேலும், இத்தொழிலை அழிவிலிருந்து மீட்க, அரசு இலவச மணல் வழங்க முன்வர வேண்டுமெனவும், தளஓடு உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூலப்பொருட்கள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கலால், தளஓடு தயாரிப்பு தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மழை இல்லாததாலும், போதிய மணல் கிடைப்பதில் சிக்கல் நிலவுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இதுபோன்று பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே, தாங்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பணகுடி சுற்றுவட்டாரப் பகுதியில் நாளுக்கு நாள் தளஓடு தொழிற்சாலைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்லும் நிலையில், மணல் அள்ள அரசு நேரடி அனுமதி வழங்க வேண்டுமென்பதே உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.