ஞாயிறு, 15 ஜனவரி, 2017

மகாத்மா காந்தியின் உருவம் பதித்த காலணிகளை அமேசான் நிறுவனம் விற்பதால் சர்ச்சை

மகாத்மா காந்தியின் உருவம் பதித்த காலணிகளை அமேசான் நிறுவனம் விற்பதால் சர்ச்சை

அமேசான் நிறுவனத்தின் அமெரிக்க இணையதளத்தில் மகாத்மா கந்தியின் உருவம் அச்சிடப்பட்ட காலணிகள் விற்பனைக்கு வைக்கப்பட்ட சம்பவம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசான், மிதியடியில் இந்திய தேசிய கொடியை பொறித்து விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், அமேசான் நிறுவனம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டுமென்றும், இல்லையெனில் அந்நிறுவன 
அதிகாரிகளுக்கு இந்திய விசா அளிக்கப்படாதென்றும் எச்சரித்தார். 

இதையடுத்து மன்னிப்பு கேட்டுக் கொண்ட அமேசான் நிறுவனம், மூவர்ணம் கொண்ட மிதியடிகளையும் திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இந்த சர்ச்சை ஓய்வதற்குள் தற்போது அந்நிறுவனத்தின் அமெரிக்க இணைய தளத்தில், மகாத்மா காந்தியின் உருவம் அச்சிடப்பட்ட காலணிகள், விற்பனைக்கு வைக்கப்பட்ட சம்பவம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

இதனால் அதிருப்தி அடைந்துள்ள மத்திய அரசு, இந்தியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் என அமேசான் நிறுவனத்தை வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக அமேசான் நிறுவனத்திடம் வலியுறுத்துமாறு, வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்திடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.