சென்னையில் நேற்று ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஒட்டி வன்முறையாளர்கள் நடத்திய தாக்குதலில் வடக்கு மண்டல இணை ஆணையர் கார் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டது. தாக்குதல் நடத்தியவர்கள் டிரைவர் காரை எடுக்காமல் இருக்க கண்ணில் மிளகாய் பொடியை தூவி கட்டையால் தாக்கியதில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் நேற்று நடந்த வன்முறையில் பூந்தமல்லி சாலையில் சந்தோஷபுரம் குடியிருப்பு பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலையில் கற்களை போட்டு தடை ஏற்படுத்தினர்.
இது பற்றி செய்தி அறிந்து கூடுதல் ஆணையர் ஸ்ரீதர் , வடக்கு மண்டல இணை ஆணையர் சந்தோஷ்குமார் தலைமையில் அதிரடிபடை போலீசார் விரைந்தனர்.
கார் எழும்பூர் நாயர் பாலத்தின் வழியாக கீழே இறங்கியது. முன்னாள் போலீஸ் பேருந்தில் அதிரடிப்படை போலீசாரும் பின்னால் இணை ஆணையர் சந்தோஷ் குமார் மற்றும் அதற்கு பின்னால் கூடுதல் ஆணையர் ஸ்ரீதர் காரும் வந்தது.
கார்கள் பாலத்தின் மீது நிற்கையில் அதிரடிப்படை போலீசார் பேருந்து மட்டும் கீழே இறங்கியது. இணை ஆணையர் சந்தோஷ்குமார் போராட்டக்காரர்களுடன் ஆய்வு நடத்த கீழே இறங்கினார். அப்போது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
இதனால் அதிரடிப்படை போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர்.ஆனால் அவர்கள் திருப்பி தாக்கவே இணை ஆணையர் ஓடிச்சென்று போலீசாரின் பேருந்தில் ஏறிக்கொண்டார். போலீஸ் பேருந்தில் அதிரடிப்படை ஏற அது சென்றுவிட்டது.
இதனால் தாக்குதல் நடத்தியவர்கள் கண்ணில் பாலத்தின் மீது நின்றிருந்த இணை ஆணையர் சந்தோஷ்குமார் கார் கண்ணில் பட்டது. அவர்கள் ஓடிச்சென்று அந்த காரை தாக்கினர். சிலர் பின்னால் பக்கத்தில் நின்றிருந்த போலீஸ் வேன் மற்றும் மாநகர பேருந்தை தாக்கினர்.
இதைப்பார்த்த சந்தோஷ்குமாரின் கார் ஓட்டுனர் தலைமை காவலர் செந்தில்குமார்(40) காரை எடுத்து தப்பிக்க முயன்றார். ஆனால் வன்முறை கும்பல் அவர் கண்ணில் மிளகாய் பொடியை தூவியது. இதில் நிலை குலைந்து போன செந்தில் குமார் காரை வேகமாக செலுத்தினால் யார் மீதாவது மோதிவிடுவோமோ என்று கண்ணை மூடிக்கொண்டு மெதுவாக இறங்கினார். இதில் பெரிய கல்லில் சிக்கி கார் நின்றது.
உடனே வன்முறையாளர்கள் காரை சுற்றி நின்று சரமாரியாக தாக்கினர். ஒருவன் கட்டையால் குத்தியதில் வலது கண்ணில் கடுமையான காயம் ஏற்பட்டு செந்தில்குமார் நிலைகுலைந்தார். காரைவிட்டு இறங்கிய அவரை கும்பல் சரமாறியாக தாக்கியது. சாலை ஓரத்திற்கு இழுத்து சென்று கற்களை அவர் மீது போட்டதில் கை , கால் எலும்புகள் முறிந்தன. தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
ரத்த வெள்ளத்தில் அவரை போட்டு விட்டு அந்த கும்பல் காரை புரட்டி போட்டு தீவைத்து எரித்தனர்.ரத்த வெள்ளத்தில் கிடந்த செந்தில் குமார் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு ராஜிவ் காந்தி மருத்துவமனியில் சிகிச்சர் பெற்று வருகிறார்.
செந்தில்குமாரை தாக்கியதாக செங்கோட்டையை சேர்ந்த கல்யாண்குமார்(21), சாத்தூரை சேர்ந்த மதன்குமார்(22), செங்கோட்டையை சேர்ந்த இசக்கிராஜ்(21) , சங்கரன்கோவிலை சேர்ந்த பாலசுப்ரமணியன் (21) ஆகிய நால்வர் உட்பட 26 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது பிரிவு 147,148,332,435,307&506(ii) IPC r/w 3 of TNPPDL Act , ஆகியவற்றின் கீழ் எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
source: maalaimalar