மெரினா புரட்சியில் எது நடந்ததோ, இல்லையோ சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளாக பாசம்மிகுந்த மதுரைக்காரர்கள், வந்தாரை வாழவைக்கும் மெட்ராஸ்வாசிகள், மரியாதைக்குப் பெயர்போன கோயம்புத்தூர்க்காரர்கள், வீரத்துக்குப் பெயர்போன நெல்லையைச் சேர்ந்தவர்கள், அனைவருக்கும் சோறுதரும் தஞ்சை தரணிக்காரர்கள், வற்றாத காவிரி பாயும் திருச்சிவாசிகள் என்று நிலவியல் குறுகிய எண்ணங்களை உடைத்து எறிந்து, நாம் ‘அனைவரும் தமிழர்கள்’ என்ற நிலைப்பாடு மேலோங்க காரணமாயிருந்தது, ஜல்லிக்கட்டு மீட்பு பிரச்னைதான்.
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டுப்போட்டிக்காக, அதைப் பற்றி அறிந்திராத, பிறமாவட்ட மக்களும் அறவழியில் போராட மெரினாவில் கைகோர்த்தனர். ஆரம்பத்தில் அலங்காநல்லூர், மெரினா, வாடிப்பட்டி என சிறியஅளவில் ஒன்றுதிரண்ட போராட்டம், நாளடைவில் ஜல்லிக்கட்டு எனும் ஒரு பெரும்நோக்கத்துக்கு ஆக தமிழகம் முழுதும் தன் கிளைகளைப் பரப்பியது. போராட்டத்தில் திருநெல்வேலியில் ஒரு மைதானத்தில் இசுலாமிய இளைஞர்கள் தொழுகை நடத்திக்கொண்டிருக்கும்போது மழைபெய்கிறது. அந்த மழை பெய்யும்போது இசுலாமிய இளைஞர்களின் தொழுகை கெட்டுவிடக்கூடாது என்பதற்காக, தார்பாயைப்பிடிக்கிறார்கள் இந்து மக்கள். ஒருவழியில், மதச்சார்பற்று மக்களை ஒன்று திரட்டிய முக்கிய போராட்டம் இது.
இப்படி நடந்த இளைஞர்களின் இந்த போராட்டத்தில் அன்பும் நேர்மையும் இருந்தது. அவர்களின் செயல்பாட்டில் ஒரு கண்ணியம் இருந்தது. இதனால், ஜல்லிக்கட்டுக்கு நடந்த போராட்டம் தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் பிடித்திருந்தது.
மெரினாவில் போலீஸார் செய்யவேண்டிய சாலை சீரமைப்புப் பணியை வாலன்டியராகச் சென்று சீராக்கினர், ஜல்லிக்கட்டு போராட்ட குழுவினர்.
மெரினாவில் போலீஸார் செய்யவேண்டிய சாலை சீரமைப்புப் பணியை வாலன்டியராகச் சென்று சீராக்கினர், ஜல்லிக்கட்டு போராட்ட குழுவினர்.
அங்கு பாதுகாப்புப் பணிக்கு வந்த போலீஸாருக்கு உணவுப்பொட்டலங்களையும், குடிக்கத் தண்ணீரையும் கொடுத்தனர், போராட்டக்காரர்கள் அவர்களின் களைப்புக்கு இளநீரையும், காபியையும் பருக கொடுத்தனர், அந்த தன்னெழுச்சியான இளைஞர்கள். இதனால் போராட்டக்களத்தில் 'ஒன்னும், ஒன்னும் ரெண்டு, போலீஸ் நம்ம ஃப்ரெண்டு" - என முழக்கங்கள் ஓங்கி ஒலித்தன. இதெல்லாம் நிலவியது என்னவோ ஜனவரி -17 முதல் 22-ம்தேதி, ஞாயிற்றுக்கிழமைவரை தான் என்பது மட்டும் உண்மை. அதன்பின் நாம் பார்க்கமுடிந்தது என்னவோ, 'நான் போலீஸ் இல்ல;......" ரக போலீஸைத்தான்.
அறவழியில் கூடிய கூட்டத்தைக் கலைக்க, கடந்த 23-ம் தேதி அதிகாலை முதல் அத்துமீறலை செய்யத் துவங்கியது தமிழக காவல்துறை. உடனடியாக அங்கு குழுமியிருந்த கர்ப்பிணிப் பெண்கள், பச்சிளங்குழந்தைகள், நோயாளிகள், முதியவர்கள் மற்றும் இளைஞர்கள் என அனைவரையும் படிப்படியாக வலுக்கட்டாயமாக மெரினாவை விட்டுத் தள்ளி வெளியேற்றியது, காவல்துறை.
கலைய சிறிது நேரம் கேட்டவர்களுக்குப் பதிலளிக்காமல், தன் அத்துமீறலைத்துவக்கி, தடியடியை மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டது. இதனால், காவல்துறையை நம்பி, போராளிகளுக்கு உதவிய, உணவு சமைத்துக்கொடுத்த அத்தனை பேரும் நிலைகுலைந்து போனார்கள். அதாவது, அவ்வுதவிகளைச் செய்த குடிசைமாற்றுவாசிகளும், மீனவ மக்களும்தான் பெருமளவில் பாதிக்கப்பட்டார்கள். ஏனெனில், அவர்கள் வசிக்கும் பகுதியில் புகுந்த போலீஸார், தெருவில் நின்றிருந்த ஆட்டோ, பைக், ஜன்னல் கண்ணாடி ஆகியவற்றை அத்துமீறி அடித்து நொறுக்கினர். சிலவற்றை தீக்கரையாக்கினர். எதிர்த்துப்பேசிய மீனவ மக்களை தங்கள் கைகளில் இருந்த ராடுகளின் மூலமும், லத்திகளின் மூலமும் தாக்கினர். அவர்களின் மீன் கடைகளை தீக்கரையாக்கினர். அவர்களின் மேல் கற்களை வீசினர். மேற்கூறிய ஒவ்வொரு குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரமாக தற்போது ஒவ்வொன்றாக சோஷியல்மீடியாக்களில் வீடியோக்கள் பதிவேற்றி வருகிறார்கள்.
சென்னை கமிஷனர், முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் பேசினாலும், அங்கு இருக்கும் அத்தனை குடும்பங்களும் போலீஸாரை சரமாரியாக குற்றம்சாட்டுகின்றன. இந்நிலையில் இதில் போலீஸாரால் பெருமளவில் பாதிக்கப்பட்டது சென்னை நடுக்குப்பம், ஐஸ்ஹவுஸ், மாட்டாங்குப்பம் , சிட்டி சென்டர் அம்பேத்கர் பாலப்பகுதியை சுற்றியுள்ளவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், காவல்துறையோ ஐஸ் ஹவுஸ் போலீஸ் ஸ்டேஷன் எரிப்புக்கும், நடந்த வன்முறைகளுக்கும் இவர்களின்மேல் சமூக விரோதிகள் என முத்திரைக்குத்தி, இப்பகுதி ஆண்களைத் தேடி வருகிறது. ஆண்கள் இல்லாத வீடுகளில் அத்துமீறி அராஜகம் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், இப்பகுதியே தூக்கம் தொலைத்து இரவிலும் விழித்திருக்கிறது. அவர்களை இரவில் சந்தித்தோம்.
நடுக்குப்பம் நீலம் பாஷாதர்ஹா தெருவைச் சேர்ந்தவர் கூறுகையில், 'எங்க புள்ளைங்க ஒன்னும் தப்பு செய்யலை. போலீஸ்காரங்கதான், இந்த ஏரியாக்குள்ள வந்து அடிச்சு, உடைச்சாங்க. ஜல்லிக்கட்டு போராட்டக்களத்தில் ஒரு பொண்ணை அடிச்சதில் ஐந்துமாதக் குழந்தையின் கரு கலைஞ்சுபோயிடுச்சு. இரண்டு வயசு சிறுமி இறந்துட்டா. ஒரு பொண்ணை கழுத்தறுத்து கொன்னுட்டாங்கன்னு சொல்றாங்க. எத்தனையோ பேர் வெளியில் சொல்லாம, அவ்வளவு அடியையும் வாங்கிட்டு அமைதியாப் போயிட்டாங்க. மீன்மார்க்கெட்டை எரிச்சுட்டாங்க. மீனவ ஜனங்களை அடிக்கிறானுங்க. வீட்டை அடிச்சு உதைக்கிறாங்க. கல் எடுத்து எரியுறாங்க. இங்க நாங்க யாரும் நைட் நிம்மதியாக தூங்கவே முடியலை. எங்களை யாரும் போலீஸ்காரங்க வந்து அடிச்சிடுவாங்களோ, எங்க வீட்டை உடைச்சிடுவாங்களோன்ற பயத்துலேயே தூங்காம இருக்கோம். என் வீட்டுக் கதவையும் பூட்ஸ்காலால மிதிச்சு உடைச்சுட்டாங்க. போலீஸ் அராஜகம் ஒழியணும்' என்றார் கோபமாக.
நடுக்குப்பம் நீலம் பாஷாதர்ஹா தெருவைச் சேர்ந்தவர் கூறுகையில், 'எங்க புள்ளைங்க ஒன்னும் தப்பு செய்யலை. போலீஸ்காரங்கதான், இந்த ஏரியாக்குள்ள வந்து அடிச்சு, உடைச்சாங்க. ஜல்லிக்கட்டு போராட்டக்களத்தில் ஒரு பொண்ணை அடிச்சதில் ஐந்துமாதக் குழந்தையின் கரு கலைஞ்சுபோயிடுச்சு. இரண்டு வயசு சிறுமி இறந்துட்டா. ஒரு பொண்ணை கழுத்தறுத்து கொன்னுட்டாங்கன்னு சொல்றாங்க. எத்தனையோ பேர் வெளியில் சொல்லாம, அவ்வளவு அடியையும் வாங்கிட்டு அமைதியாப் போயிட்டாங்க. மீன்மார்க்கெட்டை எரிச்சுட்டாங்க. மீனவ ஜனங்களை அடிக்கிறானுங்க. வீட்டை அடிச்சு உதைக்கிறாங்க. கல் எடுத்து எரியுறாங்க. இங்க நாங்க யாரும் நைட் நிம்மதியாக தூங்கவே முடியலை. எங்களை யாரும் போலீஸ்காரங்க வந்து அடிச்சிடுவாங்களோ, எங்க வீட்டை உடைச்சிடுவாங்களோன்ற பயத்துலேயே தூங்காம இருக்கோம். என் வீட்டுக் கதவையும் பூட்ஸ்காலால மிதிச்சு உடைச்சுட்டாங்க. போலீஸ் அராஜகம் ஒழியணும்' என்றார் கோபமாக.
நடுக்குப்பம் பகுதியின் நுழைவு வாயில் அருகே இரவு 1.20 மணிக்கு குழுமியிருந்த பெண்கள் பேசுகையில் ,'எங்க வீடுகளுக்கு ஓடி வந்த, போராடுற பசங்களை, 23-ம் தேதி இரவு பிடிச்சுட்டுப் போனாங்க. ரொம்ப அசிங்க, அசிங்கமாய் பேசினாங்க. பொம்பள போலீஸே அப்படி பேசுச்சு. அவ போலீஸா, ரவுடியானே தெரியலை! பீர்பாட்டில் எடுத்து உடைக்கிறாங்க. ஒரு மூட்டை நிறைய கல் கொண்டு வந்து எரியுறாங்க. எங்களோட D -5 காவல் நிலையத்தில் இருந்துகூட யாரும் வந்து எங்களை அடிக்கவரவில்லை. எல்லோரும் புதியவங்களாகத்தான் இருந்தாங்க. இரக்கமே படாம அடிச்சாங்க. அதுவும் ஒரு பெண் போலீஸ், தன் முகத்தை ஒரு வெள்ளை கர்சிஃப்ல மறைச்சுக்கிட்டு ஆட்டோ, பைக் என எல்லாத்துலேயும் பவுடரைப்போட்டுட்டு தீ வைச்சு கொளுத்துச்சு.
மீன் மார்க்கெட்ட தீவைச்சு கொளுத்துனது. பக்கத்துலயிருந்த பஜ்ஜிக்கடையை தள்ளிவிட்டு கொளுத்துனது எல்லாமே போலீஸுதான். அங்கேயிருந்த மீன்களைக்கூட போலீஸ்காரங்க தூக்கிட்டுப் போனாங்க. தடுத்துக் கேட்கப்போனவங்க கிட்ட, கண்ணீர்ப்புகை குண்டுவீச்சு பண்ணுனாங்க. இதில் மாட்டிக்கிட்டு குழந்தைங்க பலருக்கு மூச்சுத்திணறல் வந்துடுச்சு. மீனவர்களான எங்களுக்கு ஆதாரமே மீன் பிடி வலைகள் தான். அதையும் தீ வைச்சு எரிச்சுட்டாங்க. எங்களோட பிழைப்பையேக் கெடுத்துட்டாங்க. எங்க வீட்டுல இருக்குற ஆண்களை மிரட்டுனாங்க. உயிருக்குப்பயந்து, அவுங்க எல்லாம் வேற இடங்களுக்குப் போயிட்டாங்க. எங்கவீட்டுக்குள் ஓடிவந்த இளைஞர்களை விரட்டி அடிக்கமுடியுமா? நாங்க எல்லாம் பிள்ளைங்களே பெத்துக்கலையா.
தமிழ்நாட்டில் பிறந்தது தப்பா. எங்களைத் தேடிவந்த தமிழ்மக்களை ஆதரித்தது தப்பா. வந்தவங்களைப் பிடிச்சுட்டு போகும்போது, பிடிச்சுட்டுப்போறதுக்கு காரணம் கேட்டால் பெரிய ராடு வைச்சு அடிக்கிறாங்க. எங்களோட ஆட்டோ, பைக், வாசல் கதவு, கண்ணாடி ஜன்னல் எல்லாத்தையும் உடைச்சாங்க. மக்கள் தப்புப் பண்ணுனா நாங்க போலீஸ்கிட்ட சொல்லுவோம். போலீஸே தப்புப் பண்ணுனா, நாங்க யாருகிட்ட சொல்றது' என்று கண்ணீர் மல்க கூறினார்கள்.
'கள்வன் கன்னமிட்டால் காப்பவனிடம் கூறலாம். காப்பவனே கன்னமிட்டால் நாம் யாரிடம் கூறுவது' என்பது பழமொழி.
சமூகவிரோதிகளாக போலீஸ் செயல்படுவது சரியா? காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
சமூகவிரோதிகளாக போலீஸ் செயல்படுவது சரியா? காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
பின்குறிப்பு: ஜல்லிக்கட்டு உரிமை மீட்புப்போராட்டத்தில், போலீஸ்காரர்கள் செய்த தவறுகளையும் கமென்டில் பதிவிடுங்கள்.
http://www.vikatan.com/news/tamilnadu/78690-at-the-end-of-marina-revolution-is-the-police-focus-slum-people.art