புதுடெல்லி
புதுடெல்லி: தேசிய கீதத்தில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு, பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ”நமது நாட்டின் தேசிய கீதமாக ஜன கண மன இருக்க வேண்டுமா அல்லது வந்தே மாதரம் இருக்க வேண்டுமா என்பது பற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. ஆனால், அப்போதைய அரசியல் நிர்ணய சபை தலைவரான ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத் வாக்கெடுப்பு நடத்தாமல், 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி ஜன கண மன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார். மேலும், வருங்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து வாக்கெடுப்பு நடத்தி தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
ஜன கண மன பாடல், 1912-ல் கொல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தின் போது இங்கிலாந்து மன்னரை வரவேற்க பாடப்பட்டது என்ற குற்றச்சாட்டு உள்ளது. எனவே, இதுகுறித்து நாடாளுமன்றத்தில் ஒருமித்த கருத்தை எட்டுவது அவசியம். இங்கிலாந்து ஆட்சிக்கு எதிராக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவ கீதத்தில் சில வார்த்தைகளை பயன்படுத்தினார்.
அந்த வார்த்தைகளை தேசிய கீதத்தில் இணைத்து மாற்றம் செய்ய வேண்டும். தேசிய கீதத்தில் 95 சதவீதத்தை அப்படியே வைத்துக்கொண்டு, மீதமுள்ளவற்றில் இந்திய சுதந்திர போராட்ட வீரர்களின் பெயரை சேர்க்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.