
பீகாரில் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி மரணமடைந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காவல் நிலையத்தை தீ வைத்துக் கொளுத்தி தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.
பீகாரின் போஜ்பூர் மாவட்டத்திலுள்ள பர்ஹாரா காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ராம் சஜன் சத்வா என்பவர் சந்தேகத்திற்கிடமான வகையில் மரணமடைந்தார்.
போலீசார் தாக்கியதிலேயே ராம் சஜன் சத்வா மரணம் அடைந்ததாகக் கூறி ஆத்திரமடைந்த பொதுமக்கள் பர்ஹாரா காவல் நிலையத்தை அடித்து நொறுக்கினர். மேலும் காவல் நிலையத்திற்கு தீ வைத்த அவர்கள் அதன் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறையினரின் வாகனங்களையும் தீவைத்துக் கொளுத்தினர்.
இந்த தாக்குதலில் போலீசார் சிலர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே காவல்நிலையத்தை சூறையாடிய பொதுமக்கள் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.