மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கில் பதிலளிக்க அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இறுதிக்கெடு விதித்துள்ளது.
சென்னை, கோவை மாநகாரட்சிகளின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு கோரப்பட்ட டெண்டரில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அமைச்சர் வேலுமணி தமது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, நெருங்கியவர்களுக்கு ஒப்பந்தத்தை வழங்கியதால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும், இதுகுறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறையின் ஆரம்பகட்ட விசாரணையின் நிலை அறிக்கையை ஒரு மாதத்தில் தாக்கல் செய்ய கடந்த ஜனவரி மாதம் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை அதிகாரியான லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி சங்கர் ஆஜராகி, முறைகேடு புகார் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தார்.
முழுமையான விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 3 வார காலம் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், உத்தரவு பிறப்பித்து ஓராண்டு காலம் ஆகியும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என தெரிவித்து, மேற்கொண்டு விசாரணையை லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பி பொன்னி மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்த விசாரணையை கண்காணித்து 2 வாரங்களில் அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கில் இதுவரை பதிலளிக்காத அமைச்சர் வேலுமணி பதிலளிக்க 2 வாரம் கடைசி கெடு விதித்து விசாரணையை நவம்பர் 1 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.