சனி, 19 அக்டோபர், 2019

“இந்தியாவில் விற்கப்படும் பெருநிறுவனங்களின் பால் கூடதரமானது இல்லை”-அதிர்ச்சி அறிக்கை!

credit ns7.tv
Image
இந்தியாவில் விற்கப்படும் பதப்படுத்தப்படாத பால் மட்டுமல்லாமல், பெருநிறுவனங்களின் பதப்படுத்தப்பட்ட பால் கூட தரமானது இல்லை என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டுக் கழகம் (Food Safety and Standards Authority of India) (FSSAI)  ஆய்வு முடிவை இன்று வெளியிட்டுள்ளது. அதில் பதப்படுத்தப்படாத பால் மட்டுமல்லாமல், பதப்படுத்தப்பட்ட பாலும் பரிந்துரைக்கப்பட்டுள்ள தரம் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை எட்டுவதில் தோல்வியடைந்திருப்பதாகவும், இவற்றில் பெரும் பால் விற்பனை நிறுவனங்களும் அடக்கம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு கழகத்தின் செயல் நிர்வாக அதிகாரி பவன் அகர்வால், பாலில் கலப்படம் தான் அதிகம் செய்யப்படுகிறது என்று பொதுமக்கள் நம்புகின்றனர். ஆனால், கலப்படத்தைவிட மாசுக்கள் தான் அதிகம் காணப்படுகிறது என்று வருத்தம் தெரிவித்துள்ள அவர், பெருநிறுவனங்கள் விற்பனை செய்யும் பாலில் கூட மாசுக்கள் இருக்கிறது, இதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று தெரிவித்துள்ளார். மேலும், ஆய்வு செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட பால் மாதிரிகளில் அஃப்லாடாக்சின்-எம்1, நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் போன்றவைகள் தான் அதிகம் காணப்பட்டது என்றும், எடுக்கப்பட்ட 2,607 பதப்படுத்தப்பட்ட பால் மாதிரிகளில் பத்துசதவீதம் உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு கழகம் வழங்கியுள்ள தரத்தில் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பதப்படுத்தப்படாத பாலை விட பதப்படுத்தப்பட்ட பாலில் அஃப்லாடாக்சின்-எம்1 தான் அதிகம் காணப்பட்டது என்றும், இவை காணப்பட்டது தமிழ்நாடு, டெல்லி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் பெறப்பட்ட மாதிரிகளில் தான் அதிகம் என்றும் பவன் அகர்வால் தெரிவித்துள்ளார்.
தரத்தை பொறுத்தவரை, 37.7% பதப்படுத்தப்பட்ட பால் மாதிரிகள் தரவிதிமுறைகளிக்கு உட்படவில்லை என்றும், அவற்றில் கொழுப்பு, மால்டோடெக்ஸ்ட்ரின் மற்றும் சர்க்கரை ஆகியவை அனுமதி அளிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக இருந்ததாக பவன் தெரிவித்துள்ளார். இவைகள் எல்லாம் ஒழுங்குபடுத்தப்பட்ட பால்வளத்துறைக்கு விழிப்புணர்வு அழைப்பு என்று தெரிவித்துள்ள அவர் பாலில் இருக்கும் கொழுப்பு மற்றும் SNF என்று அழைக்கப்படும் solids-not-fat ஆகியவை விதிமுறைகளுக்கு உட்படாமல் அதிக அளவில் இருக்கிறது என்றும், பால்வளத்துறையினர் இதன் மீது நடவடிக்கை எடுத்து அடுத்த 6-8 மாதங்களுக்கு, அனுமதி அளிக்கப்பட்டுள்ள தரக்கட்டுப்பாடுகளுக்கு இணக்கமாக பால் உற்பத்தியை செய்யவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 
தரத்திற்குட்பட்டு பால் உற்பத்தி செய்யாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாதா என்ற கேள்விக்கு “அவர்கள் எங்கள் ஆய்வு முடிவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று தெரிவித்த பவன் அகர்வால், தர விதிமுறைகளுக்கு உட்பட்டு பால் உற்பத்தி மற்றும் விநியோகம் செய்யவேண்டும் என்றும், “பரிசோதனை மற்றும் ஆய்வு” என்ற திட்டம் தொடங்கப்பட்டு அவற்றின் கண்காணிப்பில் எல்லா பால் நிறுவனங்களையும்  ஜனவரி 2020 வரை வைக்குமாறும் ஒழுங்குமுறை பால்வள துறைக்கு, ஒழுங்குமுறை அதிகாரி உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், ஒழுங்குபடுத்தப்படாத, பதப்படுத்தப்படாத பால் விற்பனையாளர்கள் தரக்கட்டுப்பாடுகளை பின்பற்றுவதற்காக மற்றும் சரியான தீவனங்களை பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வை மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வின் அறிக்கையை, மே 2018 முதல் அக்டோபர் 2018 வரை எல்லா மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 1,103 நகரங்களில் எடுக்கப்பட்ட 6,432 பால் மாதிரிகளில் இருந்து பெற்றதாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. அவற்றில் 40.5% பால் பதப்படுத்தப்பட்ட பால் மாதிரிகள் என்றும் மீதம் பதப்படுத்தப்படாத பால் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், இந்த பால் மாதிரிகள் அனைத்தும் 
ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைப்புசாரா துறைகளிடமிருந்து பெறப்பட்டது என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.