credit ns7.tv
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக பொறுப்பேற்ற பின்னர் சோனியா காந்தி தலைமையில் சந்திக்கப் போகும் முதல் தேர்தலாக ஹரியானா மற்றும் மகராஷ்டிர சட்டமன்ற தேர்தல் இருக்கப்போகிறது. நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னதாக தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்திருந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவராக ஆகஸ்ட் மாதத்தில் சோனியா பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் ஹரியானா மாநிலம் மகேந்திரகார்ஹ் பகுதியில் நடைபெறவுள்ள முதல் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இன்று அவர் பங்கேற்று பேச இருந்த நிலையில் இன்றைய கூட்டத்தில் சோனியாவிற்கு பதிலாக ராகுல் காந்தி கலந்துகொள்வார் என்று காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் பதிவிடப்பட்டது. பின்னர் அப்பதிவு நீக்கப்பட்டது.
தேர்தல் நடைபெறும் மகராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை தேர்தல் பரப்புரை கூட்டங்களில் சோனியா கலந்துகொள்ளாத நிலையில் மகேந்திரகார்ஹ்-ல் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராவ் தான் சிங்கை ஆதரித்து அவர் பேச இருந்தார். இருப்பினும் திடீரென சோனியா கலந்துகொள்ளாதது குறித்து காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை
வரும் டிசம்பர் மாதத்தில் 73வது பிறந்த தினத்தை கொண்டாட இருக்கும் சோனியா பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்வது சமீபகாலமாக மிகவும் அரிதாகவே உள்ளது. கடந்த ஜூன் 12ம் தேதி ரேபரேலி தொகுதியில் தனக்கு வெற்றியை தேடித்தந்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பேரணியில் அவர் பேசினார்.
அதே போல கடந்த ஆண்டு தெலங்கானா சட்டமன்ற தேர்தலின் போது அவர் பரப்புரை செய்ததே கடைசியாக அவர் கலந்துகொண்ட தேர்தல் பிரச்சார கூட்டமாக அமைந்தது.
காங்கிரஸ் கட்சிக்குள் ராகுல் மற்றும் சோனியா ஆதரவாளர்களிடையே சலசலப்பு ஏற்பட்டு வரும் நிலையில் சோனியா காந்தியின் பிரச்சாரம் ரத்தாகியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.