வியாழன், 25 மே, 2017

கொளுத்தும் வெயில் மனிதனுக்கான எச்சரிக்கை மணி!

கொளுத்தும் வெயில் மனிதனுக்கான எச்சரிக்கை மணி!


கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. 'இதுவரை இல்லாத அளவுக்கு' என்ற அடைமொழியுடன் கிட்டத்தட்ட எல்லா மாவட்டங்களும் வெயிலை பார்த்துவிட்டன. போன வருடத்தில் மழை குறைவு. அதற்கு முந்தைய வருடம், சொல்லவே தேவை இல்லை. இந்த வருடத்தில் வெயில். இனி வறட்சி! 

என்னதான் நடக்கிறது? இப்படித்தான் இருக்க போகிறதா?  

Day after tomorrow படத்தில் வரும் வசனம்போல சொல்வதெனில், we are in the verge of a major climate shift!

இந்த க்ளைமேட் ஷிஃப்ட் மனித குலத்துக்கே க்ளைமேக்ஸாகவும் இருக்கலாம். இதற்கு முன்னும் மனித குலம் தோன்றிய காலத்தில் இருந்து பருவநிலை மாற்றங்கள் இருந்தன. அழிவுகளும் இருந்தன. இதுவரை உலகில் ஐந்து பேரழிவுகள் நிகழ்ந்துள்ளன. பேரழிவு என்றால் உலக உயிரினங்களின் பெரும்பான்மை அழிந்துபோவது. இந்த பேரழிவுகளில் பெரும்பாலானவை பனியுகங்களாலும் அதிகரித்த கார்பன் அளவு, எரிமலை குழம்பு போன்ற காரணங்களாலும் நிகழ்ந்தவை. 

சமீபமாக தோன்ற தொடங்கியிருக்கும் மிக தீவிரமான பருவநிலைகள் ஒரு நிரந்தர பருவநிலை யதார்த்தத்துக்கு உயிர்களை அறிமுகப்படுத்தத்தான் என கருதப்படுகிறது. சில வருடங்களுக்கு ஒருமுறையான மாற்றமாக இனி இது இருக்கப் போவதில்லை. நான் எழுதிக்கொண்டிருக்கும் நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் ஆறாவது பேரழிவு நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வழிகளை ஆராய உலக நாடுகளின் தலைவர்கள் பாரிசில் 2015ல் கூடினார்கள். கார்பன் வெளியீட்டை எல்லா நாடுகளும் குறைத்துக் கொள்ள வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. மாநாட்டில் சொன்ன வேகத்தில் குறைக்க முடியாது என்பதே இந்தியாவின் தரப்பு. அமெரிக்கா போன்ற முதல் உலக நாடுகளை போல் வளர்ச்சியுற கார்பன் வெளியீடு அதிகம் இருக்க வேண்டும் என்பது இந்தியாவின் வாதமாக இருந்தது.  

மாநாடு கொடுத்திருந்த நேர கணிப்பை எல்லாம் கடந்து பூமி இப்போது சூடாகி கொண்டிருக்கிறது. அதை பாதுகாக்கும் கட்டத்தை மனிதர்கள் இழந்து விட்டார்கள். இனி மனித குலத்துக்கு மிச்சம் இருப்பது, வடக்கிருந்து உயிர் நீத்தல் மட்டுமே. 

ஐ.நா வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்று, "பருவநிலை மாற்றம் நேர, பெரிய காரணமாக இல்லாத ஏழைகள்தான் அதனால் அதிகம் பாதிக்கப்படுவார்கள்" என்கிறது. Nestle நிறுவனத்தின் தலைவர் பீட்டர் ப்ரபேக் "தண்ணீர் மனிதனின் அடிப்படை உரிமை அல்ல. அது ஒரு விற்பனை பொருள்" என சொல்லியிருக்கிறார். எளியவன் தாகத்துக்கு குடிக்கும் தண்ணீரும் இனி பிடுங்கப்பட்டுவிடும். 
தண்ணீரே இனி உலகப் பொருளாதாரங்களை நிர்ணயிக்கும். செயற்கை பஞ்சங்களை மூன்றாம் உலக நாடுகளில் உருவாக்கும் திட்டங்கள் உலக அளவில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒரு பகுதிதான் ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டங்கள் எல்லாம். ‘இனி வரும் போர்களுக்கும் கலகங்களுக்கும் பருவநிலை மாற்றம் முக்கிய காரணமாக இருக்கும்’ என ஒப்புக் கொண்டிருக்கிறது ஐ.நா.

இயற்கையின் படைப்புகளிலேயே மனிதன்தான் மாபெரும் அழிவுச்சக்தி!

அறிவியலாளர்கள் எச்சரிக்கைகள் பல கொடுத்து சலித்து விட்டார்கள். அரசுகளின் போக்கு மாறுவதாக இல்லை. ரஷ்யா போன்ற நாடுகள் இயற்கை விவசாயத்துக்கு மாறி விட்டதாக சொல்லிக்கொண்டாலும் இந்தியா போன்ற நாடுகளில் அணு உலைகள் அமைக்கின்றன. எல்லாருக்கும் எல்லாமும் எப்போதும் தேவையாக இருந்து கொண்டிருக்கும்போது எதுவுமே மாறாது. 

அதிகாரமும் பலமும் அற்ற எளிய மனிதனோ உலக அழிவு ரொம்ப தூரத்தில் இருப்பதாக நினைத்து கொண்டிருக்கிறான். அப்படியே நெருங்கினாலும் அரசுகள் ஏதேனும் தீர்வு கொடுத்து காப்பாற்றி விடும் என நம்புகிறான். ஆனால் அரசுகள் உயிர் வாழவே அவனைத்தான் பலி கொடுக்க போகின்றன என அறியாமல் இன்னும் அதிகதிகமாக சுகித்தபடி கிடக்கிறான்.

கிணறு தோண்டுங்கள், தண்ணீர் கிடைக்காது. பயிரிடுங்கள், விளைச்சல் நிற்காது. கழுதைக்கு கல்யாணம் செய்யுங்கள், மழை வராது. காடுகள் தாண்டும் யானைகளையும், கரை ஒதுங்கும் திமிங்கலங்களையும் தாண்டி சீரியல்கள் அல்லது கிரிக்கெட் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி சேனல்களை நோக்கி நாம் ஓடிக்கொண்டிருப்போம்.

செவ்வாய் கிரகத்திலும் நிலவிலும் காலனிகள் உருவாக்க அறிவியல் போராடிக் கொண்டிருக்கும். மனித மமதையின் குப்பை மேடாக பூமி மாற்றப்பட்டிருக்கும்.

உலகின் கடைசி மனிதனை கெட்ட வார்த்தையில் திட்ட இயற்கை தயாராகி கொண்டிருக்கிறது. அவனும் வேறேதும் செய்ய நாதியற்று கேட்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறான்.

-ராஜசங்கீதன்
கட்டுரையாளர்

Related Posts: