சனி, 27 மே, 2017

தந்தையின் ஈமச்சடங்கு..! மணியார்டரில் லஞ்சப் பணம்! கலெக்டரை அதிர வைத்த பெண்! மூடி மறைத்த ஊடகங்கள்

விழுப்புரம், திருநாவலூரை சேர்ந்தவர் சுதா. இவர் விழுப்புரம் மாவட்ட கலெக்டருக்கு எழுதியுள்ள கடிதத்தில், எனது தந்தை கடந்த ஆண்டு இறந்து விட்டார். அவரது இறப்பு சான்றிதழ் மற்றும் ஈமச்சடங்கு தொகையை வழங்க 3 ஆயிரம் லஞ்சம் கேட்டார் கிராம உதவியாளர் பலராமன்.
ஆனால், நாங்கள் தர மறுத்துவிட்டோம். அதன் பிறகு எனது தந்தையின் இறப்பு சான்றிதழை பெற 6 முறை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றும்  கிடைக்கவில்லை. இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தேன். கடந்த நவம்பர் மாதம் இறப்பு சான்றிதழை வழங்கினார்கள்.
மேலும், எனது தாய் உளுந்தூர்பேட்டை தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் என் தந்தையின் ஈமச்சடங்குத் தொகையைக் கேட்டு விண்ணப்பித்தார். அந்த விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்ட கிராம உதவியாளர் பலராமன் மீண்டும் எங்களிடம் 500 ரூபாய் லஞ்சமாகக் கேட்டார்.

இந்தப் பணத்தை நான் மட்டும் வைத்துக் கொள்ளப் போவதில்லை. ஆர்.ஐ, வி.ஏ.ஓ, தனி வட்டாட்சியர் நிர்வாகம் என அனைவருக்கும் பங்கு தரவேண்டும். நீ எங்கு சென்றாலும் இங்குதான் வர வேண்டும் என்றும் எங்களை மீறி உன்னால் எதுவும் செய்ய முடியாது என்றும் பலராமன் கூறினார்.
இந்த கடிதத்தின் மூலம் மாவட்ட ஆட்சியருக்கு மேலும் நான் தெரிவிக்க நினைப்பது, மக்களின் வீட்டில் வாழ்வோ சாவோ இவர்களுக்குத் தேவை மாதச் சம்பளமும், லஞ்சமும்தான். பெண்களின் கழுத்தில் தாலி ஏறினாலும், அவர்களின் கழுத்தில் தாலி இறங்கினாலும் இவர்களுக்கு லஞ்சப் பணம் தேவை.
அதனால் இவர்களுக்கான லஞ்சப் பணம் 2 ஆயிரம் ரூபாயை தங்களுக்கு மணியார்டர் மூலம் அனுப்பியிருக்கிறேன் என்பதை இந்த மனு மூலம் தெரியப்படுத்துகிறேன்.
இந்தப் பணத்தை கிராம உதவியாளர் பலராமன், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், உளூந்தூர்பேட்டை தனி வட்டாட்சியர் போன்றவர்களுக்கு உங்கள் கைகளாலேயே பிரித்துக் கொடுத்து அவர்களின் பதவி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
அந்த அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை பாய்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்??
http://kaalaimalar.in/the-bribe-money-maniyartar-for-village-women/