நேர்மையற்ற வழிகளில் எரிவாயுக் கிணறு அமைக்க அனுமதியைப் பெற ஓ.என்.ஜி.சி. முயற்சிக்கிறது!
காவிரிப்படுகையில் எதிர்ப்பு காரணமாக கருத்துக் கேட்பே இல்லாமல் காரியத்தை முடிக்க ஓ.என்.ஜி.சி. முயற்சி!
காவிரிப்படுகையில் எண்ணெய்-எரிவாயுக் குழாய்ப் பதிக்க முறையாக மக்களிடம் கருத்துக் கேட்பு நடத்தப் பயந்து, கொல்லைப் புற வழியாக உள்ளே புகும் வேலைகளை ஓ.என்.ஜி.சி. செய்து கொண்டிருக்கிறது.
எண்ணெய்-எரிவாயுக் குழாய்ப் பதிக்கத் திட்டமிட்டபடி திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் குழாய்ப் பதிப்பிற்காக மக்களிடையே கருத்துக் கேட்பு நடத்துவதிலிருந்து ஓ.என்.ஜி.சி.-க்கு விலக்கு அளிக்கும்படியும், இம்மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி. அமைக்க இருக்கும் 21 ஆய்வுக் கிணறு குழாய்ப் பதிப்பிற்குச் சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கும்படியும் சுற்றுச்சூழல் துறையில் மதிப்பீட்டு நிபுணர் குழு (Expert Appraisal Committee) பரிந்துரை செய்துள்ளது.
இச்செய்தி காவிரிப்படுகை மக்களுக்கும், பொதுவாக தமிழகத்துக்கும் பேரதிர்ச்சியை அளித்துள்ளது. கடந்த ஜூன் 2015 இல், இந்த மதிப்பீட்டு நிபுணர்குழு, இன்று அனுமதிக்கப்படும் 21 குழாய்களையும், கடலூர் மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவ உத்தேசித்துள்ள 14 ஆய்வுக் கிணறுகளையும் சேர்ந்து 35 கிணறுகளை அமைக்க அனுமதி வழங்க முன் வந்தது. அதற்கு இக்குழு கூறிய காரணங்கள்;
''மக்களிடம் கருத்துக் கேட்பு நடத்துவதில் கால விரயம் ஆகிறது, மற்றும் இந்த விஷயம் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் கிடப்பில் இருக்கிறது''
என்பவை.
''மக்களிடம் கருத்துக் கேட்பு நடத்துவதில் கால விரயம் ஆகிறது, மற்றும் இந்த விஷயம் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் கிடப்பில் இருக்கிறது''
என்பவை.
2015 மே மாதம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு ஒ.என்.ஜி.சி. அனுப்பிய கடிதத்தில் நாகை, திருவாரூர், தஞ்சை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பெட்ரோலிய ஆய்வுக் கிணறுகள் அமைப்பது பற்றி மக்களிடம் கருத்துக் கேட்பு நடத்துவதிலிருந்து விலக்கு அளிக்கும்படி கோரியது.
இதற்கு ஓ.என்.ஜி.சி., 2014-ஆம் ஆண்டிலேயே மக்களிடம் கருத்துக் கேட்பு நடத்தபட்டுவிட்டது என்றும், அவை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் கிடப்பில் இருப்பதாகவும், ஆகவே கருத்துக் கேட்பே இல்லாமல் ஆய்வுக்குழாய்களை நிறுவ அனுமதிக்குமாறும் கோரியது,
இக்கோரிக்கைக் கடிதத்தைப் பரிசீலித்து மத்திய சுற்றுச்சூழல் துறையின் மதிப்பீட்டு நிபுணர் குழு கருத்துக் கேட்பிலிருந்து விலக்கு அளிக்கவும், நான்கு மாவட்டங்களிலும் 21 ஆய்வுக் கிணறுகள் அமைக்க அனுமதி அளிக்கவும் பரிந்துரைத்துள்ளது. இதன்படி, அரியலூர் மாவட்டத்தில் 6 இடங்கள், நாகப்பட்டினம் மாவட்டம் 9, திருவாரூர் 1, தஞ்சாவூர் 5 என 21 குழாய்கள் அமைக்கப்படும், ஆனால், எந்த அடிப்படையில் இந்தப் பரிந்துரைகள் வழங்கப்பட்டன என்று சுற்றுச்சூழல் அமைச்சகம், நிபுணர் குழுவிடம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது,
நிபுணர்குழுவிடம் ஓ.என்.ஜி.சி. அளித்த தவறான மற்றும் பொய்யானத் தகவல்களின் அடிப்படையிலேயே இந்தப் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன,
கடந்த 2014 ஆம் ஆண்டிலேயே இந்த நான்கு மாவட்டங்களில் கருத்துக் கேட்பு நடத்தி முடிக்கப்பட்டதாகவும், எண்ணெய்-எரிவாயு பிளாக்கு வாரியாக சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஓ.என்.ஜி.சி. கூறியது. இப்போது அமைக்கப்படும் கிணறுகள் பழைய கிணறுகளிலிருந்து 10 கி.மீ. தூரத்துக்குள் இருப்பதால் பழைய பிளாக்கு வாரியாக அளிக்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி புதிய கிணறுகளுக்கும் பொருந்தும் என்ற கருத்தை ஓ.என்.ஜி.சி. கூறியது.
நிபுணர்குழு மூன்று விஷயங்கள் குறித்து ஓ.என்.ஜி.சி.யிடம் கேட்டது:
1. மாவட்டம் மற்றும் ஆண்டு வாரியாகக் கருத்துக் கேட்பு நடத்தப்பட்ட விபரம்,
2. பழைய கிணறுகளுக்கும், இப்போது அமைய இருக்கும் கிணறுகளுக்கும் இடையிலான தூரம்,
3. திட்டத்தை எதிர்த்து மக்கள் போராட்டங்கள் உள்ளனவா என்பது பற்றி.
ஓ.என்.ஜி.சி. கூறியுள்ளபடி, தஞ்சாவூரில் 10-07-2014 நாகப்பட்டினத்தில் 20-06-2014, திருவாரூரில் 27-06-2014, அரியலூரில் 20-10-2014 ஆகிய நாட்களில் கருத்துக் கேட்பு நடத்தப்பட்டன. ஆனால், இக்கருத்துக் கேட்புக் கூட்டங்கள் ஓ.என்.ஜி.சி-யின் திட்டங்களை நிராகரித்தே முடிந்தன.
இக்கருத்துக் கேட்புக் கூட்டங்களுக்கு வந்திருந்தவர்கள் இத்திட்டங்களை கடுமையாக எதிர்த்தனர், இத்திட்டம் வரலாம் என்று ஒருவர் கூட கூறவில்லை. கூட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டதாகவே அறிவிக்கப்பட்டன.
அந்தந்த கிராமங்களில் கருத்துக் கேட்பை நடத்தும்படியும் முறையாக மக்கள் மத்தியில் அறிவித்துவிட்டு, அவர்கள் பங்கேற்கும் வகையில் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும் இக்கூட்டங்களில் வற்புறுத்தப்பட்டது.
திருவாரூர் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்திய மாவட்ட ஆட்சியர் எம்.மதிவாணன், "கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. அடுத்தக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும்" என்று அறிவித்தார்.
தஞ்சாவூரில் கருத்துக்கேட்பு 10-07-2014 அன்று மாவட்ட ஆட்சியர் என்.சுப்பையன் தலைமையில் நடைபெற்றது. கூடியிருந்தவர்கள் "எங்களுக்கு எந்த விளக்கமும் தேவையில்லை. ஓ.என்.ஜி.சி-யே வெளியேறு" என்று தொடர்ந்து முழக்கமிட்டனர். எந்த ஆய்வுக்கிணறும் அமைக்கக் கூடாது என்ற கருத்தைப் பதிவு செய்த மாவட்ட ஆட்சியர்,
"இந்தக் கூட்டத்தின் அடிப்படையில் எந்த முடிவும் எடுக்கப்படாது"
என்று கூறி கூட்டத்தை முடித்தார்.
"இந்தக் கூட்டத்தின் அடிப்படையில் எந்த முடிவும் எடுக்கப்படாது"
என்று கூறி கூட்டத்தை முடித்தார்.
இதே நிலைதான் பிற மாவட்டங்களிலும். மக்களைச் சந்திக்கப் பயந்த ஓ.என்.ஜி.சி. திருட்டுத்தனமான முறைகளில் சுற்றுச்சூழல் அனுமதி பெற முயற்சிக்கிறது. கருத்துக் கேட்பு கூட்டங்களில் கருத்துப் பதிவு (மினிட்ஸ்)களை நிபுணர்குழு பார்த்ததா? பார்த்திருந்தால் இப்படி ஒரு பரிந்துரையை வழங்குமா? அடிப்படை ஆவணங்களை முறையாகக் கவனத்தில் கொள்ள நிபுணர்குழு தவறியிருக்கிறது.
கூடுதலாக, ஓ.என்.ஜி.சி.-யிடம் நிபுணர் குழு கேட்டது. மக்கள் போராட்டம் பற்றி, எண்ணெய்-எரிவாயுத் திட்டங்களை எதிர்த்து இந்த நான்கு மாவட்டட்களிலுமே தொடர்ந்து போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. பல வழக்குகளும் போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ஓ.என்.ஜி.சி.,யின் செயல்பாடுகளை எதிர்த்து இம்மாவட்டங்களில் எந்தப் போராட்டமும் நடைபெறவில்லை என்ற பொய்த் தகவலை ஓ.என்.ஜி.சி. அளித்துள்ளது. இக்கருத்துக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசின் நோட்டரி வழங்கிய பிரமாணப் பத்திரத்தை ஓ.என்.ஜி.சி. நிபுணர் குழுவிடம் வழங்கியுள்ளது.
இச்செய்தி காவிரிப்படுகை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தமிழக அரசுக்குத் தெரியாமல் நோட்டரி ஒரு தவறான சான்றிதழை வழங்க முடியுமா? தமிழக அரசு இது குறித்து விசாரித்து மக்களுக்கு விளக்க வேண்டும்,
ஓ.என்.ஜி.சி. இது போன்ற நேர்மையற்ற, கொல்லைப்புற வழிகளின் மூலம் தங்கள் திட்டத்தை நடைமுறைப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது,
இதை, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது, அடிப்படை ஆவணங்களை முறையாகப் பரிசீலிக்காமலே, ஓ.என்.ஜி.சி-யின் பொய்த் தகவல்களை ஏற்றுக் கொண்டு, சுற்றுச்சூழல் மதிப்பீட்டு நிபுணர்குழு பரிந்துரைகளை வழங்கியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். மக்கள் எதிர்ப்பு குறித்தும், மாசுக்கட்டுப்பாட்டு அனுமதி மறுக்கப்படுவதன் நியாயப்பாடு குறித்தும், தமிழக அரசு மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு உடனடியாகத் தெரியப்படுத்த வேண்டும், தமிழக அரசு இத்திட்டங்களுக்கு எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது.
காவிரிப்படுகை மக்களை அணிதிரட்டி ஓ.என்.ஜி.சி.-யின் அத்துமீறல்களை மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தடுத்து நிறுத்தும். வருகிற 20-ம் தேதி முதல் மாவட்டத் தலைநகரங்களிலும் பிற நகர்பகுதிகளிலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும்.
பேராசிரியர் த.செயராமன்
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு
https://www.facebook.com/antimethaneprojectfederation/posts/672794852917872