சனி, 13 மே, 2017

ஆஸ்துமாவை சமாளிக்க எளிய வழிகள்

சீரான உணவுப் பழக்கவழக்கங்கள், சிறிது நேரம் உடற்பயிற்சி செய்தாலே ஆஸ்துமாவை எளிதாக சமாளிக்காலாம்.
ஒவ்வொரு வருடமும் மே மாதம் முதல் செவ்வாய்க்கிழமை உலக ஆஸ்துமா தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம், இந்தியாவில் 10 லட்சமும், உலக அளவில் 23.5 கோடி மக்களும் ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வருவதாக கூறுகிறது. வாழ்க்கை முறையை மாற்றுவதால் ஆஸ்துமாவை எதிர்த்து போராட முடியும், சீரான உணவுப் பழக்கவழக்கங்கள், முறையான உணவுக் கட்டுப்பாடு, எளிமையான உடற்பயிற்சி மற்றும் யோகா போன்றவை ஆஸ்துமாவை எதிர்த்துப் போராட மிக முக்கியமானவைகள் ஆகும். ஆஸ்துமாவை முழுவதுமாக குணப்படுத்த முடியாது என்பது ஒருபுறம் இருந்தாலும், மேலே சொன்ன வழிமுறைகளைக் கடைபிடித்தால் ஆஸ்துமா நோயாளிகள் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்க்கையை அனுபவிக்கலாம் என்று ஃபோர்டிஸ் மருத்துவமனையின் மருத்துவர் விகாஸ் மெளரியா கூறினார்.
வீட்டில் உள்ள படுக்கை தூசிகள், செல்லப்பிராணிகளின் ரோமங்கள், அதிகப்படியாக வீட்டில் சேரும் தூசிகள் மற்றும் புகைபிடித்தல், ரசாயனங்களின் வாசனையை முகர்தல், மரம் உள்ளிட்ட எரியக்கூடிய பொருட்களில் இருந்து வெளியேறும் நச்சுப் புகைகள் போன்றவைகள் ஆஸ்துமா வருவதற்கான காரணங்களாக உள்ளன.
இருமல், மூச்சுத்திணறல், மார்பு இருக்கம், அதிகாலை வேலை மற்றும் இரவு நேரங்களில் தொண்டை உருத்தல், பதற்றமாக உணர்தல் போன்றவை ஆஸ்துமாவின் ஆரம்பக கால அறிகுறிகள் ஆகும். சரிவர மருந்துகளை எடுத்துக்கொள்ளுதல், வீட்டினுள் தூசிகளை அப்புறப்படுத்துதல் மற்றும் புகை பிடிப்பதை தவிர்தல் போன்றவற்றைக் கடைபிடித்தால் ஆஸ்துமாவை எளிதாக எதிர்கொள்ளலாம். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா இருக்கும் பட்சத்தில், அவர்களுடன் மருந்துகளை கொடுத்து அனுப்ப வேண்டும். பள்ளிகளில் எழுதுகோல் தூசிகளிலிருந்து ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை தூரமாக அமரச் செய்ய வேண்டும்.