தமிழகம் முழுவதும் ஏரி, குளங்களை தூர்வாரும் நோக்கில், மண், கிராவல் மண் மற்றும் சவுடு மண் ஆகியவற்றை விவசாயம் மற்றும் இதர பயன்பாட்டிற்காக பொதுமக்ள் உரிய ஆவணங்களை காட்டி பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதன் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 80-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்களிலிருந்து மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெயரில் வாங்கப்படும் அனுமதி சீட்டைக் கொண்டு வணிக ரீதியாக குளங்களில் மண் அள்ளப்பட்டு பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கீழவல்லநாடு என்ற கிராமத்தின் பிராமணன் என்ற குளத்தில் தூர்வாரப்பட்டு வருகிறது. இந்த குளத்தில், முறைகேடாக சரள் மண் எடுக்கப்பட்டு பல லட்சம் ரூபாய்க்கு தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதை தற்போது கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு தெய்வச்செயல்புரத்தைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி அக்ரி எஸ். பரமசிவன் பல்வேறு புகார் மனுக்களை அனுப்பியுள்ளார்.
பரமசிவன் அளித்துள்ள புகார் மனுவில், குளத்தை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுப்பதுபோல், ஒரு மனுவை தயார் செய்துள்ளனர். அதனை, அப்போதைய வனச்சரக அலுவலர் நெல்லைநாயகம் கோரம்பள்ளம் வடிநிலக்கோட்ட அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார். வனத் துறையினர் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் கடிதத்தின் அடிப்படையில் கடந்த டிசம்பர் 19ம் தேதியன்று கோரம்பள்ளம் வடிநிலக் கோட்ட அலுவலகத்திலிருந்து தனியாருடன் சேர்ந்து குளத்தை தூர்வாரலாம் என அனுமதி கடிதம் கொடுத்துள்ளனர்.
இந்த அனுமதி கடிதத்தை வைத்தும், மாவட்ட ஆட்சியரால் அறிவிப்பு வெளியிடப்பட்ட தொழில்துறை அரசாணை நகலை தவறாக பயன்படுத்தியும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மண் மற்றும் சரள் மண் குளத்தில் இருந்து எடுக்கப்பட்டு வெளியாள்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த மெகா மோசடியில், அரசு அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். இதுமட்டுமல்லாமல், மாவட்டம் முழுவதும் இதேபோல் அரசின் விதிமுறையை மீறி மண் எடுக்கப்படுவதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த புகாரின் பேரில், சார்- ஆட்சியர் தீபக் ஜேக்கப் விசாரணை மேற்கொண்டதில் அரசு அதிகாரிகள் பலர் இந்த விதிமுறை மீறல் சம்பவத்துக்கு உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மெகா மோசடியில் ஈடுபட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குளத்திலிருந்து எடுக்கப்பட்ட மண் எவ்வளவு தொகைக்கு விற்பனை செய்துள்ளனர் என கண்டறிந்து சம்பந்தப்பட்டோரிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
http://kaalaimalar.in/forgery-sand-tubing-the-ponds/