திங்கள், 8 மே, 2017

மதுக்கடைகளை மூடக்கோரி தமிழகத்தில் நீடிக்கும் போராட்டம்! May 08, 2017




தமிழகத்தின் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் இன்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நீடாமங்கலம் அடுத்துள்ள ஆதனூரில் இருந்த டாஸ்மாக் மதுக்கடை அகற்றப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அப்பகுதியில் மதுக்கடை திறக்க அதிகாரிகள் முயன்று வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் வேளாங்கண்ணி-திருச்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோவில் அருகில் உள்ள மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நெல்லையப்பர் கோவில் அருகில் மதுக்கடை இயங்கி வருகிறது. இதனை அகற்ற கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து கடையை முற்றுகையிட்டு அப்பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உசிலம்பட்டியில் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பதாக புகார் எழுந்தது. இதனையடுத்து உசிலம்பட்டி கோட்டாட்சியர் சுகன்யா தலைமையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நந்தவனம் தெருப்பகுதியில் மதுபாட்டில் விற்பனை செய்த மாயி, முருகன் ஆகிய இருவரையும் போலிசார் கைது செய்தனர்.

கோவில்பட்டி அருகே மூடபட்ட டாஸ்மாக் மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து 100க்கும் மேற்பட்டோர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தூத்துக்குடி மாவட்டம் ஆலம்பட்டி பகுதியில் மதுக்கடை திறக்க அதிகாரிகள் முயற்சிப்பதாக புகார் எழுந்தது. மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர். இதேபோன்று திருச்செந்தூரிலும் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருப்பூரில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி ஏராளமான பெண்கள் மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டனர். திருப்பூர் கே.வி.ஆர் நகர் பகுதியில் செயல்படும் மதுக்கடையால் பெண்கள், சிறுமிகள் உள்ளிட்டோர் அப்பகுதியில் செல்ல முடியாத நிலை உள்ளது. அந்த மதுக்கடையை அகற்றக்கோரி 500க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது மதுக்கடையை அகற்றக்கோரி பெண்கள் கண்ணிர்மல்க ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் மதுக்கடைகளை மூடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அரிமளம் அருகேயுள்ள காயாம்பட்டியில் இரு தினங்களுக்கு முன்பு புதிதாக டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கொத்தமஙலத்தில் உள்ள 2 மதுக்கடைகளையும் மூடவலியுறுத்தி கிராம மக்கள் மாவட்ட அட்சியரை சந்தித்து மனுஅளித்தனர். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர்.

அரியலூர் மாவட்டம் திருமழப்பாடியில் உள்ள மதுக்கடையை அகற்றவில்லை என்றால் மதுக்கடையை உடைக்கும் போராட்டட்தில் ஈடுபடுவோம் என கிராமமக்கள் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் உள்ள மதுக்கடையால் பெண்கள், சிறுமிகள் வெளியில் செல்ல முடியாத நிலை உள்ளதாக தெரிவித்தனர். இதனால் பள்ளி மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுவதாக தெரிவித்த அவர்கள், மாவட ஆட்சியர் தனசேகரை சந்தித்து  கோரிக்கை மனு அளித்தனர்.

Related Posts: