பேராசிரியருக்கு சிறை தண்டனையா ஒரு விளக்கம் !
கடந்த 1997 ஆம் ஆண்டு நவம்பர் 30 தேதி கோவையில் முஸ்லிம்களுக்கெதிராக காவி பாசிச சக்திகளும்,காவல்துறையின் ஒரு பிரிவினரும் இணைந்து நடத்திய தொடர் கலவரம்,கொள்ளை,துப்பாக்கி சூட்டில் 19 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதோடு கோடிக்கணக்கான சொத்துகள் சூறையாடப்பட்டன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்காததையடுத்து சமூகத்தின் மீது அக்கறை கொண்ட நல்லுள்ளங்கள் சிலரால் கோவை முஸ்லிம் நிவாரண நிதி( Covai Muslim relief Fund, CMRF) என்ற பெயரில் ஒரு அறக்கட்டளை தொடங்கப் பட்டு பொது மக்களிடம் நிதி திரட்டப்பட்டு கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும்,உயிரிழந்தோரின் குடும்பத்திற்கும் நிதி வழங்கப்பட்டது. இந்த நிவாரண நிதிக்கு வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழக சொந்தங்களும் பண உதவியை அளித்திருந்தனர்.
இந்த மனிதாபிமான உதவிகள் கோவை மக்களுக்கு பெரும் ஆறுதலை அளித்தது. இதை பொறுக்காத அன்றைய வாஜ்பேயி தலைமையிலான மத்திய பாஜக அரசு வெளிநாட்டிலிருந்து சட்ட விரோதமாக பணம் பெற்றதாகவும், வருமான வரித்துறையை ஏமாற்றியதாகவும் இரண்டு வழக்குகளை தொடுத்தது. முதல் வழக்கு சிபிஐயால் விசாரிக்கப்பட்டது, இரண்டாவது வழக்கு வருமான வரித்துறை(Income Tax)யால் விசாரிக்கப்பட்டது.
சிபிஐ இந்த வழக்குக்கு சற்றும் தொடர்பில்லாத தமுமுக தலைவர்கள் பேரா.ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி ஆகியோரை வழக்கில் சேர்த்தது. நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக தமுமுக கடும் எதிர்ப்பு பிரச்சாரம் செய்ததே காரணம். கோவை நிவாரண நிதி அலுவலகம் தமுமுக வளாகத்தில் செயல்பட அனுமதித்ததாக காரணம் கூறப்பட்டது. இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கல என மனித உரிமை ஆர்வலர்களால் கண்டிக்கப்பட்டது. இவ் வழக்கு சென்னை எழும்பூர் மெட்ரோபாலிட்டன் (ACMM) நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வருமான வரி வழக்கை விசாரித்த வருமான வரித்துறை அதிகாரிகள் கோவைக்கு நேரில் சென்று நிவாரண நிதி பெற்ற அனைவரையும் விசாரித்து இந்த நிதியில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. அனைத்து நிதிகளும் முறையாக வழங்கப்பட்டு கணக்குகள் முறையாக பராமரிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தனர் இதையடுத்து வருமான வரித்துறை டிரியுபூனல் கடந்த 2003 ல் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
சிபிஐ வழக்கில் கடந்த செப்டம்பர் 30,2011 அன்று மெட்ரோபாலிட்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி ஆகியோருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் கோவை நிவாரண அறக்கட்டளையின் நிர்வாக உறுப்பினர்கள் மூவருக்கு இரண்டாண்டு சிறை தண்டனையும் வழங்கியது. நிர்வாக உறுப்பினர்களில் ஒருவரான நிசார் அஹ்மது அவர்களுக்கு வயது 80 என்பது குறிப்பிடத்தக்கது.இந்த வழக்கில் அந்நிய நாடுகளின் நிதியோ, அந்நிய நாட்டவர்களின் நிதியோ ஏதும் பெறப்படவில்லை என்ற வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை.எனினும் இடைக்கால பிணை வழங்கியது.
இதையடுத்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் (Addl.CBI Special Court) விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில் தமுமுக சார்பாக மூத்த வழக்கறிஞர் பி.குமார் மற்றும் வழக்கறிஞர்கள் ஆஜராகி சிறப்பான வாதங்களை எடுத்து வைத்தனர். இவ்வழக்கில் கடந்த 16.6.2017 வெள்ளிக்கிழமையன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சிபிஐ நீதிமன்றம் உறுதி செய்தது.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கில் இன்று மேல்முறையீடு செய்யப்பட்டு விசாரணைக்காக இன்னும் சில நாட்களில் வர உள்ளது. மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராக உள்ளனர். தற்போது கைது செய்யப்பட கூடிய அபாயம் இல்லை என்பதால் சகோதரர்கள் யாரும் கவலை அடைய வேண்டாம். சமூகத்திற்கு நலன் நாடியதற்காக பொய் வழக்கில் பத்தாண்டுகளுக்கு மேல் அலைந்து,திரிந்து உடல்,மன உளைச்சலோடு இருக்கும் பேராசிரியர் உள்ளிட்ட ஐவருக்கும் உங்கள் துஆக்களை அதிகப்படுத்துங்கள். இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் சரியான நீதியை வழங்கி அரசியல் பொய் வழக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க பிரார்த்தியுங்கள்.
வழக்கறிஞர் ஜைனுல் ஆபிதீன்
மாநில வழக்கறிஞர் அணி செயலாளர். மமக
மாநில வழக்கறிஞர் அணி செயலாளர். மமக