வியாழன், 29 ஜூன், 2017

இருதரப்பினரிடையே மோதல்; போலீஸ் தடியடி! June 28, 2017

 இருதரப்பினரிடையே மோதல்; போலீஸ் தடியடி!


பழனியில் பசுக்களை மினி லாரியில் ஏற்றிச் சென்றது தொடர்பாக இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கல்வீச்சில் 4 பேர் படுகாயமடைந்தனர். இதனால், அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

மணப்பாறையில் இருந்து, பழனி வழியாக  பொள்ளாச்சி தேவனூர்புதூருக்கு 7 பசுங்கன்றுகளை ஏற்றி சென்ற வாகனத்தை, மன்னார்குடி வைஷ்ணவ மடத்தை சேர்ந்த செண்டலங்கார செண்பக ஜீயர் என்பவர்,  தடுத்து பழனி காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். இதை அறிந்து பழனி காவல்நிலையத்தில் ஜீயருக்கு ஆதரவாக இந்து அமைப்பினரும்,  எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்பினர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் குவிந்தனர். ஜீயரை கைது செய்ய வலியுறுத்தி அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

மேலும், காவல்நிலையத்தில் இருந்து ஜீயர்  வெளியேறும்போது, அவர் சென்ற வாகனத்தின் மீது ஒரு தரப்பினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து,  இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதேபோல மற்றொரு தரப்பினரும் சாலைமறியல் செய்தனர்.  இதைத் தொடர்ந்து பேருந்து மீது திடீரென கற்கள் வீசப்பட்டதால், கலவரத்தை கட்டுப்படுத்த அதிரடிப்படையினர் மற்றும் போலீசார் தடியடி நடத்தினர்.  இதில் பலர் காயமடைந்தனர். இந்த கலவரத்தால் பழனி நகரம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது.