கதிராமங்கலத்திலுள்ள எண்ணெய்க் கிணறுகளை பராமரிக்கும் பணி மட்டுமே நடைபெற்றுவருகிறது என்று ஓ.என்.ஜி.சி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. ஓ.என்.ஜி.சியின் இந்த விளக்கத்தைப் போராட்டக் குழுவினர் மறுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கதிராமங்கலத்தில் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் எண்ணெய்க் கிணறு தொடர்பான பணி நடைபெற்று வந்தது. இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து கிராமம் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
கோப்புப்படம்
கதிராமங்கலம் கிராமம் முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். அதனால், அந்த ஊர் மக்கள் கிராமத்தைவிட்டு வெளியேறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனையடுத்து ஓ.என்.ஜி.சி தனது எண்ணெய்க் கிணறு பணியை நிறுத்தியது. இந்தநிலையில், இதுகுறித்து ஓ.என்.ஜி.சி விளக்கமளித்துள்ளது. அந்த விளக்கத்தில், 'கதிராமங்கலத்தில் எண்ணெய்க் கிணறுகள் பராமரிப்புப் பணி மட்டுமே நடந்தது. பராமரிப்பு ஆய்வைத் தவிர வேறு எந்தப் பணிகளும் நடைபெறவில்லை. பராமரிப்பு பணியால் குடிநீருக்கோ, நிலத்தடி நீருக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. சமூக வலைதளங்களில் பரப்படும் கருத்துகளை நம்பவேண்டாம். பராமரிப்புப் பணிகளை தொடர அனுமதிக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளது.
ஓ.என்.ஜி.சியின் கருத்துகளை மறுத்து கருத்து தெரிவித்த போராட்டக்குழுவைச் சேர்ந்த பெ.மணியரசன், 'ஓ.என்.ஜி.சி நிர்வாகம் பொய்யான செய்தியை பரப்புகிறது. அந்த நிறுவனத்தின் சார்பில் புதிதாக ஏராளமான குழாய்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. புதிதாக ஒரு எண்ணெய்க் கிணறு தோண்டும் பணி நடைபெற்றது. பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து அந்தப் பணி நிறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு, ஊடகங்கள் ஆகியோர் அடங்கிய குழுக்கள் ஒன்றிணைந்து இதுதொடர்பான உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும்' என்றார்.
http://www.vikatan.com/news/tamilnadu/92986-ongc-claims-didnt-start-any-new-projects-in-kathiramangalam-protesters-denied-ongc-explanation.html