வியாழன், 1 ஜூன், 2017

பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் வேலைநிறுத்தப் போராட்டம்! June 01, 2017

பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் வேலைநிறுத்தப் போராட்டம்!


பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் மும்பையில் உள்ள சந்தைக்குக் காய்கறிகள் வரத்துப் பெரிதும் குறைந்துள்ளது. பால் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்யவும், வேளாண் விளைபொருளுக்குக் கட்டுப்படியாகும் விலை நிர்ணயிக்கவும் மகாராஷ்டிர மாநில அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கையை அரசு ஏற்காததால், மாநிலம் முழுவதும் விவசாயிகள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். 

இதனால் ஊர்ப்புறங்களில் இருந்து நகரங்களில் உள்ள சந்தைகளுக்குக் காய்கறிகள், பழங்கள் ஆகியவை அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மும்பையில் உள்ள பெரிய சந்தைக்கு, காய்கறி வரத்துப் பெருமளவு குறைந்துவிட்டது.

இன்னும் ஓரிரு நாட்கள் வேலைநிறுத்தம் நீடித்தால் காய்கறித் தட்டுப்பாடு ஏற்படும் என்றும், விலை பலமடங்கு உயரும் என்றும் வணிகர்கள் தெரிவித்துள்ளனர். ஊர்ப்புறங்களில் இருந்து பால் அனுப்புவதையும் விவசாயிகள் நிறுத்திவிட்டதால் பால் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.