வியாழன், 1 ஜூன், 2017

திரைப்படங்கள் பள்ளி மாணவிகள் மனதில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு! June 01, 2017




திரைப்படங்கள் பள்ளி மாணவிகள் மனதில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்துவதாக, சென்னை உயர்நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்த சிவசங்கரி என்பவர், காணாமல் போன தனது மகளை ஆஜர்படுத்தக்கோரி, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நீதிபதிகள் நாகமுத்து, அனிதா சுமந்த் ஆகியோரது உத்தரவின் பேரில், நாகை காவல் துறையினர் அந்த மாணவியை  ஆஜர்படுத்தினர். 

திரைப்படங்களை பார்த்து வீட்டை விட்டு காதலனுடன் ஓடியதாக, அந்த மாணவி வாக்குமூலம் அளித்த நிலையில், தணிக்கை வாரிய அதிகாரியை நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இதனை அடுத்து ஆஜரான தணிக்கை அதிகாரி, சென்சார் போர்டு விதிகள் முறையாக பின்பற்றப்படுவதாக தெரிவித்தார். YOU TUBE போன்ற இணையதளங்களில் தான் ஆபாச காட்சிகள் வெளியாவதாகவும் குறிப்பிட்டார். 

இதனை அடுத்து, திரைப்படங்கள் பள்ளி செல்லும் மாணவிகள் மனதில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், திரைப்பட விளம்பரங்களை முறைப்படுத்த அரசு  நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் பரிந்துரைத்தனர். 

மேலும் தணிக்கை வாரியம் முழு அதிகாரத்தோடு செயல்படவில்லை என்று வேதனை தெரிவித்த நீதிபதிகள், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப சட்டங்களை கடுமையாக்கும் வகையில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். இணையதளங்களில் ஆபாச காட்சிகள் வெளியிடப்படுவதை தடுக்க மத்திய மாநில அரசுகள் புதிய சட்டத்தை கொண்டுவரவும் உத்தரவிட்டு, வழக்கை நீதிபதிகள் முடித்துவைத்தனர்.