செவ்வாய், 20 ஜூன், 2017

பாகிஸ்தானின் வெற்றியை கொண்டாடியவர்கள் மீது தேசதுரோக வழக்கு! June 20, 2017

பாகிஸ்தானின் வெற்றியை கொண்டாடியவர்கள் மீது தேசதுரோக வழக்கு!


மத்திய பிரதேசத்தில் சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் வெற்றியை முழக்கங்கள் எழுப்பியும் பட்டாசு வெடித்துக் கொண்டாடியதாக 15 பேர் மீது தேசதுரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஞாயிறு அன்று இந்தியா பாகிஸ்தான் அணிகள் இடையேயான சாம்பியன்ஸ் ட்ராபியின் இறுதிப்போட்டியில் மோதின. ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 180 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியிடம் மாபெரும் தோல்வி அடைந்தது. பாகிஸ்தானின் அபார வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் மத்தியப்பிரதேசத்தின் புர்கான்பூரில் பட்டாசு வெடித்தும், முழக்கங்கள் எழுப்பியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவிதங்கள் ஏதும் நடந்துவிடாமல் இருக்க உடனடியாக போலீசார் குவிக்கப்பட்டனர்.

பின்னர் திங்களன்று 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இந்தியாவிற்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பி பொது இடத்தில் பட்டாசு வெடித்ததாக புகார் அளிக்கப்பட்டதன் பேரில் 15 பேர் கைது செய்யப்பட்டதாக சகர்பூர் காவல் நிலைய பொறுப்பாளர் சஞ்சய் பதக் தெரிவித்துள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 19 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அவர்கள் மீது 124-ஏ (தேசதுரோகம்) மற்றும் 120-பி (கிரிமினல் சதித்திட்டம்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குற்றம்சாட்டப்பட்டவர்களது ஜாமின் மனுக்கள் உள்ளூர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதால் அவர்கள் மத்திய பிரதேசத்தின் கந்வா மாவட்டத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Posts: