ஞாயிறு, 25 ஜூன், 2017

உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தும் வடகொரியா! June 24, 2017

உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தும் வடகொரியா!


கண்டம் விட்டுக் கண்டம் பாயும் புதிய பேலிஸ்டிக் ரக ஏவுகணை எஞ்சினை நேற்று வட கொரியா  சோதனை செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தச் சோதனைக்குத் தென் கொரியா, சீனா, அமெரிக்கா,ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

வடகொரியா கடந்த இரண்டு ஆண்டுகளாக இரண்டு அணுகுண்டு சோதனைகளும் பல ஏவுகணை சோதனைகளையும் நடத்தயுள்ளது. ஏற்கெனவே வடகொரியா, அடிக்கடி ஏவுகணைச் சோதனை செய்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருவதால் அந்நாட்டின் மீது ஐ.நா. பல்வேறு பொருளாதாரத் தடைகளையும் விதித்திருக்கிறது. அமெரிக்காவும் அவ்வப்போது வடகொரியாவுக்கு எச்சரிக்கைகளை விடுத்துவருகிறது. வடகொரியாவின் அணு ஆயதப் பரவலைத் தடுப்பது முக்கிய நோக்கம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். 

இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் டில்லர்சன் சீன வெளியுறவுத் துறை அமைச்சரிடம் வடகொரியாவைக் கட்டுக்குள் கொண்டு வருவது சீனாவின் பொறுப்பு என்றும், அதனைச் சீனா உறுதி செய்யவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார் . இந்நிலையில் தான் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் புதிய பேலிஸ்டிக் ரக ஏவுகணை எஞ்சினை வடகொரியா நேற்றுச் சோதனை செய்துள்ளது. ஐ.நா.மற்றும் அண்டை நாடான தென்கொரியா, அமெரிக்கா, சீனா இன்னும் பிற நாடுகளின் எதிர்ப்பையும் தாண்டி வடகொரியா மீண்டும் ஏவுகணைச் சோதனை நடத்தியிருக்கிறது. 

கடந்த முறை ஏவுகணைச் சோதனை நடந்த போது வடகொரியாவில் வெளியாகும் அனைத்து ஊடகங்களில் அந்தத் தகவல் இடம்பிடித்திருந்தது. ஆனால் இம்முறை சோதனை குறித்த தகவல்கள் வடகொரிய ஊடகங்களில் வராததால் வடகொரியாவின் ஏவுகணை ரகசியங்கள் குறித்துப் பன்னாட்டு ஊடகங்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளன.