ஞாயிறு, 25 ஜூன், 2017

ஜி.எஸ்.டி- ஒரு அடிப்படை அலசல்! June 25, 2017

ஜி.எஸ்.டி- ஒரு அடிப்படை அலசல்!


நமது நாட்டில் பலவிதமான வரிகள் அரசு மூலமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. தனிநபரிடமோ அல்லது நிறுவங்களிடம் இருந்தோ அரசு வசூலிக்கும் வரிகளை வைத்துதான் அரசு இயந்திரம் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் பலவிதமான வரிகள் விதிக்கப்படுகிறது. இவற்றை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். ஒன்று நேர்முக வரி மற்றொன்று மறைமுக வரி.

நேர்முக வரி.

தனிநபர் வருமான வரி, நிறுவன வருமான வரி, சொத்து வரி, போன்றவைகள் நேர்முக வரி எனப்படும். இந்த வரியானது குறிப்பிட்ட நபரிடமோ, நிறுவனத்திடமோ அரசாங்கத்தால் நேரடியாக வசூலிக்கப்படும். 

மறைமுக வரி:

கலால் வரி, சுங்க வரி, விற்பனை வரி அல்லது மதிப்புக்கூட்டு வரி போன்றவைகள் மறைமுக வரிகளாகும். நாம் அன்றாடம் வாங்கும் பொருட்கள், சேவைகள் அனைத்தும் இந்த வரியை உள்ளடக்கித்தான் விலைக்கு வாங்குகிறோம். இந்த வரிகள் பல வகையான நபர்களிடம் பெறப்பட்டாலும் ,இதனை அரசிடம் கட்டும் பொறுப்பு இதனை வசூல் செய்பவரிடம் இருக்கிறது. .

ஜி.எஸ்.டி:

ஒரு பொருளின் மீதோ, சேவையின் மீதோ நாம் இப்படி மறைமுகமாக கட்டும் வரிகளுக்கு மாற்றாக கொண்டுவரப்பட்டதுதான் ஜி.எஸ்.டி வரி (Service and goods tax ). தற்போதைய கலால் வரி, மதிப்புக் கூட்டு வரி மற்றும் சேவை வரி அனைத்தும் நீக்கப்பட்டு அனைத்தையும் ஒரு வரியின் கீழ் கொண்டு வரப்படுவதுதான் இந்த ஜிஎஸ்டி.

தற்போது பல்வேறு மாநிலங்களும் பல்வேறு விதமான மதிப்புக் கூட்டு வரிகளை வசூலித்து வருகிறது. பாண்டிச்சேரில் நீங்கள் ஒரு பொருளை 50 ரூபாய்க்கு வாங்குகிறீர்கள் என்றால் தமிழகத்தில் அதே பொருளின் விலை சற்று அதிகமாக இருக்கும். இந்த விலை கேரளா, கர்நாடக, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் வேறுபடும். இந்த விலைமாற்றத்திற்கான காரணம் அந்தந்த மாநிலங்களில் மாறுபடும் வரிவிதிப்பு தான். மாநிலங்கள் தங்களுக்குள் வர்த்தகம் செய்து கொண்டு இருக்கும் நிலையில் இந்த வரியால் குழப்பம்தான் நிலவி வருகிறது. 

இந்தக் குழப்பங்களைப் போக்கும் வகையில் அனைத்து வரிகளும் ஒரு வரியின் கீழ் கொண்டு வரவே ஜிஎஸ்டி கொண்டு வரப்படுகிறது. நாடு முழுவதும் ஒரே வரி பின்பற்றப்படும். நாடு முழுவதும் வர்த்தகம் கையாளுவதில், வரி வசூலிப்பதில் இருக்கும் சிக்கல்களை களைவதற்கு இந்த முறை பின்பற்றப்படுகிறது.

ஜி.எஸ்.டி வரியானது மத்திய அரசின் ஜிஎஸ்டி (CGST),மாநில அரசின் ஜிஎஸ்டி (SGST), மாநிலங்களுக்கு இடையேயான ஜிஎஸ்டி (IGST) என மூன்று வகையாக வசூலிக்கப்படும்.

மத்திய அரசின் ஜிஎஸ்டி (CGST): இந்த வருவாய் முழுவதும் மத்திய அரசின் மூலம் வசூலிக்கப்படும்.

மாநில அரசின் ஜிஎஸ்டி (SGST) : இந்த வருவாய் முழுவதும் மாநில அரசுகளால் வசூலிக்கப்படும்.

மாநிலங்களுக்கு இடையேயான ஜிஎஸ்டி (IGST) : மாநிலங்களுக்கு இடையில் நடைபெறும் விற்பனையின் மூலம் வரும் வருவாய் மத்தியஅரசால் வசூலிக்கப்படும்.

எடுத்துக்காட்டு: 

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு வணிகர் சுமார்  10,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை அதே மாநிலத்தில் உள்ள ஒரு வாடிக்கையாளருக்கு விற்கிறார் என்று வையுங்கள். இந்த விற்பனையில், CGST விகிதம் 9% மற்றும் SGST விகிதம் 9% , இரண்டையும் உள்ளடக்கிய சரக்கு மற்றும் சேவை வரி 18% ஆகும். இந்த விற்பனையில் வணிகர் 1800 ரூபாயை வரியாக வசூல் செய்வார். இந்த தொகையானது மகராஷ்டிர அரசின் பங்கு  900 ரூபாய் மற்றும் மத்திய அரசின் பங்கு  900 ரூபாய் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது ஆகும். இந்த வரியில் தங்களுக்கான தொகையை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து எடுத்துக்கொள்ளும்.

இப்போது, ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு வணிகர், தமிழகத்தில் உள்ள ஒரு வணிகருக்கு சுமார்  10,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை  விற்பனை செய்கிறார் என்று வையுங்கள். இந்த விற்பனையில், CGST விகிதம் 9% மற்றும் SGST விகிதம் 9% இரண்டையும் உள்ளடக்கிய சரக்கு மற்றும் சேவை வரி 18% ஆகும். இந்த விற்பனையில் வரியாக  1800 ரூபாயை IGST ஆக வணிகர்  வசூல் செய்கிறார்.  இந்த IGST தொகை மத்திய அரசுக்கு செலுத்தப்படும். ஆகையால் CGST மற்றும் SGST ஆகியவைகளை தனியாக செலுத்த வேண்டி இருக்காது.

மேலே, சொல்லப்பட்ட அனைத்து வரிகளுக்கான விலையும் அந்தந்த பொருளின் மீது கூட்டப்பட்டு கடைசியாக ஒரு பொருளை வாங்கும் நுகர்வோரிடம் அந்த தொகை வசூலிலிக்கப்படும். உதாரணமாக, நாம் ஒரு சோப்பை 100 ரூபாய் கொடுத்து வாங்குகிறோம் என்றால், அதில் மேலே சொன்ன ஜிஸ்டி வரிகளும் சேர்த்துதான் விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையால் இனி இந்தியா எங்கும் ஒரே வரிவிகிதம் செயல் படுத்தப்பட்டு இனி அனைத்து மாநிலங்களிலும் ஒரே விலையில் பொருட்கள் கிடைக்கும்.

இவ்வாறு மத்திய மற்றும் மாநில அரசுகள் எண்ணற்ற மற்றும் சிக்கலான மறைமுக வரிகளை நீக்கி, இந்த சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி)  அமல்படுத்துவதன்மூலம் வரி நிர்வாகம் மிகவும் எளிமையாக்கப்படும் என்று நம்பப்படுகிறது. மேலும் வெளிப்படையான வரிவிதிப்பு முறையால் நுகர்வோர்கள் பயனடைவார்கள். மேலும், உற்பத்தியாளர்கள் வரியை எளிதாகக் கட்டவும், நிர்வாகம் செய்யவும் இந்த மசோதா உதவும் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த வரியானது மாநில வரி வருவாயை பாதிக்கும் எனவும் ஒருசாரார் தொடர்ந்து குற்றச்சாட்டை கூறிவருகின்றனர்.