சனி, 10 ஜூன், 2017

திருப்பூரில் பள்ளிவாசலுக்கு தடை: இந்து முன்னணிக்கு வால்பிடிக்கும் காவல்துறை SUPER USER 10 JUNE 2017

திருப்பூரிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள வாவிபாளையம் என்ற பகுதியின் அருகில் இருப்பது தான் குருவாயூரப்பன் நகர்!

இப் பகுதியில் சுமார் 100 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்கின்றன, ஆனால் இவர்களுக்கான வழிபாட்டு உரிமையை நிறைவேற்ற சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் தான் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக இப்பகுதியில் வாழும் முஸ்லிம்கள் பள்ளிவாசல் கட்டுவதற்காக 4.5 சென்ட் இடம் வாங்கி பத்திரம் முடிக்கப்பட்டு பள்ளிவாசல் கட்டுமானப்பணி தொடங்கியது. அப்போது அப் பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணி, பா.ஜ.க, போன்ற அமைப்பினர் பிரச்சனைகளை கிளப்பினர். கோட்டாச்சியர், வட்டாச்சியர் முதலிய அரசு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு இங்கு அதிகமான இந்துக்கள் குடியிருப்பதால் பள்ளிவாசல் கட்டுவதற்கு அனுமதிக்க முடியாது என்றும், நீங்கள் வேறு இடத்தை வாங்கி பள்ளியை கட்டுங்கள் என்ற வாக்குறுதியுடன் சென்றனர்,

புது இடத்திற்கும் பிரச்னை

இந்நிலையில் தொழுகைக்காக அங்கிருக்கக்கூடிய ஒருவரின் வீட்டின் மொட்டை மாடியை அப்பகுதி முஸ்லிம்கள் பயன் படுத்தி வந்தனர். பள்ளிவாசல் கட்டுவதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பழைய இடத்திற்கு பதிலாக வாங்கிய வேறு ஒரு இடத்தில் கட்டுமானப் பணிகளை தொடங்கிய நிலையில் மீண்டும் பாசிச அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த எதிர்ப்புகளை எதிர்கொள்ள ஜமாஅத் நிர்வாகிகள் இது வரை சட்டரீதியான நடவடிக்கைகளின் ஈடுபட்டு வந்தனர். ஆனால் திருப்பூர் காவல்துறை ஒருதலைபட்சமாக செயல்படும் நிலையில் தமுமுக மாவட்ட தலைவர் ஹாலிதீனிடம் தங்கள் பிரச்னையை எடுத்துரைத்தனர். உடனடியாக தமுமுக மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனையின் படி அனைத்து இயங்களையும் ஒருங்கினைந்து செயல்படக்கூடிய கூட்டமைப்பு சார்பாக இப்பிரச்னையை அணுகுவது என்று முடிவெடுக்கப்பட்டது. கூட்டமைப்பின் துணை தலைவராகவும் இருக்கும் தமுமுக மாவட்ட தலைவர் ஹாலிதீன் தலைமையில் கடந்த 25 ம் தேதி மாவட்ட ஆட்சிதலைவர் ஜெயந்தி, மாநகர காவல் ஆணையாளர். இணை ஆணையாளர். துணை ஆணையாளர், உள்ளிட்ட அரசு அதிகாரிகளை சந்தித்து இப்பிரச்னை குறித்து முறையிடப்பட்டது.

காவல்துறை கெடுபிடி

இந்நிலையில் இறுதி கட்டமாக அரசு தரப்பில் அனுமதி மறுக்க, உடனடியாக கூட்டமைப்பின் துணை தலைவர் ஹாலிதீன் அவர்கள் காதர் பேட்டை பள்ளிவாசலில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ள அனைத்து இயக்கங்களின் கூட்டம் நடைபெற்றது. இந்த சூழலில் காவல்துறையின் உயரதிகாரிகள் கூட்டமைப்பு நிர்வாகிகளை தொடர்புகொண்டு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்றும், எந்த போராட்டமும் அறிவிக்காதீர்கள் என்றும் கேட்டுக்கொண்டதையடுத்து, அன்று மாலை 5 மணிக்கு கூட்டமைப்பு நிர்வாகிகள் அரசு உயரதிகாரிகளை சந்தித்து மீண்டும் பேச்சுவார்தை நடத்தினர், அதுவும் தோல்வியில் முடிய, உடனடியாக தடையை மீறி அந்த இடத்தில் தொழுகை நடைபெறும் என்று கூட்டமைப்பின் துணை தலைவர் ஹாலிதீன் அறிவித்து அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் பள்ளிவாசல் அமைய உள்ள இடத்தில் அதிக அளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பள்ளிவாசல் இடத்தை தொழுகை நடத்த முடியாத வகையில் காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.

சாலையில் தொழுகை

இச்சூழலில் வேறு வழியின்றி குருவாயூரப்பன் நகர் ஜமாத் மக்கள் நடு சாலையில் தொழுகை நடத்த முடிவெடுத்தனர். இச்செய்தி அறிந்து திருப்பூர் முஸ்லிம்கள் இரவு தொழுகையை முடித்து விட்டு காங்கேயம் சாலை சந்திப்பில் திரண்டனர். இந்த பதற்றமான சூழலில் குருவாயூரப்பன் நகர் ஜமாத் மக்கள் நடு ரோட்டில் இஷா தொழுகை மற்றும் தராவிஹ் தொழுகையை முடித்து கலைய மறுத்தனர்.

திருப்பூரில் நள்ளிரவில் ஏற்பட்ட இந்த அசாதாரண சூழலை சமூக விரோதிகள் பயண்படுத்திவிடக்கூடாது என்ற சிந்தனையுடன் அங்கு கூடியிருந்த சமுதாய சொந்தங்களுடன் இரவு 12 மணியளவில் உரையாற்றிய கூட்டமைப்பின் துணை தலைவர் ஹாலிதீன் அவர்கள் நாளை மாலைக்குள் அரசு அதிகாரிகள் அனுமதி தரவில்லையென்றால் வருகின்ற திங்கட்கிழமை 29 தேதி காலையில் கலெக்டர் அலுவலகம் முற்றுகையும் அதை தொடர்ந்து மதியம் லுஹர் தொழுகை நடைபெறும் என்றும் அறிவித்தார், உடனடியாக கூடியிருந்த மக்கள் தக்பீர் கோஷத்துடன் கலைந்து சென்றனர். இந்த பதற்றமான சூழலில் அடுத்த ஒருமணி நேரத்தில் காவல்துறை உயரதிகாரிகள் கூட்டமைப்பின் துணை தலைவர் ஹாலிதீன் அவர்களை தொடர்பு கொண்டு, கோவை காவல் ஆணையாளர் அமல்ராஜ் தலைமையில் காவல்துறை உயரதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த அழைத்தனர். இரவு 1.30 தொடங்கிய பேச்சுவார்த்தை சுமார் 50 நிமிடங்கள் நீடித்து சுமூகமான முடிவு ஏற்படாத சூழலில் பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறினர் கூட்டமைப்பு நிர்வாகிகள்.

தற்காலிக தீர்வு

அதைத் தொடர்ந்து முதல் சஹருக்கான நேரம் நெருங்க மீண்டும் அதிகாலை 3 மணியளவில் காவல்துறை உயரதிகாரிகள் கூட்டமைப்பு துணை தலைவர் ஹாலிதீன் அவர்களை தொடர்புகொண்டு ரமலான் முழுவதும் நீங்கள் தொழுதுகொள்ளூங்கள் என்றும் ஒரு சில நிபந்தனையுடன் அனுமதியளித்தனர். அதைத்தொடர்ந்து அறிவிக்கப்பட்டிருந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது! பள்ளிவாசல் பிரச்சனை தொடங்கியதில் இருந்து தமுமுக மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களின் ஆலோசனைபடி திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் இப்பிரச்சனையை கையாண்டனர்.
makkalurimai.com/index.php/stories/21-tamilnadu/679-tirupur-mosque

Related Posts: