திங்கள், 3 ஜூலை, 2017

குட்கா விவகாரம் குறித்து பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததால் திமுக வெளிநடப்பு! குட்கா விவகாரம் குறித்து பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததாக கூறி, சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். தமிழகத்தில் குட்கா விற்பனை செய்ய, அமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக அண்மையில் புகார் எழுந்தது. இந்த விவகாரத்தை சட்டப்பேரவையில் திமுக தொடந்து எழுப்பி வருகிறது. இந்நிலையில், இன்று இவ்விவகாரம் குறித்து பேச திமுக எம்எல்ஏ துரைமுருகனுக்கு இன்று சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்தார். இதனால் திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதுடன், வெளிநடப்பு செய்தனர். இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே முதல்வர் விளக்கம் அளித்துவிட்டதாகவும், எனவே மீண்டும் இது குறித்து விவாதிக்க வேண்டிய அவசியமில்லை என சபாநாயகர் தனபால் விளக்கம் அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், குட்கா விவகாரத்தில் பணிநீக்கம் செய்ய வேண்டிய காவல்துறை அதிகாரிக்கு, பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது தவறான முன் உதாரணமாக உள்ளதாக குற்றம் சாட்டினார்.

அதிமுக தன் மீது வழக்கு தொடராதது ஏன் என ஸ்டாலின் கேள்வி!



நம்பிக்கை வாக்கெடுப்பின்போது லஞ்சபேரம் நிகழ்ந்ததாக தாம் கூறிய குற்றச்சாட்டை மறுக்கும், அதிமுக அம்மா அணியினர் தன் மீது வழக்கு தொடராதது ஏன் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையை அடுத்த படப்பையில் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மு.க.ஸ்டாலின்,           தமிழகத்தில் உள்ள ஆட்சி காட்சி பொருளாக உள்ளது என்றும், குதிரை பேரத்தால் நடைபெறும் ஆட்சி என்றும் விமர்சித்தார். 

எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காக அதிமுக எம்.எல்.ஏக்களிடம், லஞ்ச பேரம் பேசப்பட்டதாக ஆங்கில ஊடகத்தில் வந்த செய்தியை சுட்டிக்காட்டி ஸ்டாலின் பேசினார்.

இந்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை என மறுக்கும் அதிமுக அம்மா அணியினர், குற்றச்சாட்டை சுமத்திய அந்த ஊடகம் மீதோ, அதனை சுட்டிக்காட்டி புகார் தெரிவிக்கும் தம் மீதோ, ஏன் இதுவரை வழக்குத் தொடரவில்லை என்று கேள்வி எழுப்பினார்.