9 1 2022 இந்தியாவில் கடந்த சில நாள்களாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் ஒன்றரை லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது மூன்றாம் அலையின் ஆரம்பம் என கணித்துள்ள நிபுணர்கள், கொரோனா 2 ஆம் அலையை விட, 2 மடங்கு பாதிப்பு அதிகளவில் இருக்கும் என்றும், தினசரி பாதிப்பு 8 லட்சம் வரை செல்லக்கூடும் எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால், கொரோனா அதிவேக பாதிப்பு எண்ணிக்கை இம்மாத பாதிக்குள் மும்பை அல்லது டெல்லி போன்ற முக்கிய நகரங்களில் காணமுடியும் என ஐஐடி கான்பூரை சேர்ந்த பேராசிரியர் மனீந்திர அகர்வால் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ” இந்தியாவில் மூன்றாவது அலை அடுத்த மாத தொடக்கத்திலோ அல்லது சற்று முன்னதாகவோ உச்சம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, ஒரு நாளைக்கு நான்கு முதல் எட்டு லட்சம் பேர் வரையிலான பாதிப்புகள் ஏற்படலாம் என கணித்துள்ளோம்.
தற்போது தான், இந்திய அளவில் கொரோனா பாதிப்பு பதிவாகிறது. எண்ணிக்கை குறைந்திட, இன்னும் ஒரு மாத காலம் ஆகலாம். மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில், தொற்றுநோயின் மூன்றாவது அலை இந்தியாவில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கக்கூடும்” என்றார்.
கோவிட்-19 தொற்றை கணித ரீதியாக கணக்கிடும் வகையில் சூத்ரா (SUTRA) என்ற மாடலை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை வடிவமைத்தது. இதனை பல்வேறு கணிதவியலாளர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். இதன்மூலம் கொரோனா எப்போது உச்சம் தொடும். பாதிப்புகள் எப்போது குறையும் என கணித ரீதியாக சில தகவல்களைப் பெறலாம்.
இதில் பணியாற்றும் அகர்வால், தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், “கொரோனா எழுச்சிக்கு, தேர்தலும் பங்களிக்கின்றன.தேர்தல் பேரணியால் தொற்று அதிகரிக்காது என கூற முடியாது. நிச்சயம் அதிகரிக்கும்.
ஆனால், மாநிலத்தில் தொற்று அதிகரிப்பதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன, அவற்றில் ஒன்றுதான் தேர்தல் பேரணிகள். ஏனென்றால், கொரோனா பாதிப்பு கணக்கீட்டில் தேர்தலை நீக்கினாலும், ஒட்டுமொத்த நிலைமை பெரிதாக மாறவில்லை என்பது ஆச்சரியப்படுத்தியது.
ஐந்து மாநில தேர்தலுக்கான அறிவிப்பு நேற்று வெளியானது. தற்போது, ஜனவரி 15 ஆம் தேதி வரை ரோட்ஷோ மற்றும் மக்களின் நேரடி பேரணிக்கு தடை விதித்துள்ள நிலையில், இவரது கருத்து முக்கியத்துவம் பெறுகின்றன.
மேலும் பேசிய அகர்வால், தேர்தல்களின் தாக்கம் குறித்த அவரது கருத்துக்கள் கடந்தாண்டு 16 மாநிலங்களில் உள்ள கோவிட் நிலைமை பகுப்பாய்வு அடிப்படையில் கூறியதாக தெரிவித்தார்.
ஒவ்வொரு மாநிலத்திற்கும், அவற்றின் இரண்டாவது அலை தாக்கத்தை நிர்வகிக்க அளவுருக்களை கணக்கிட்டோம். இது மாநிலத்தில் தொற்றுநோய் எவ்வளவு வேகமாக பரவுகிறது என்பதை அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.
அவற்றை இரண்டாகப் பிரித்தோம். ஒன்று தேர்தல் நடைபெறவிருந்த ஐந்து மாநிலங்கள். மற்றொருன்று, தேர்தல் நடைபெறாத 11 மாநிலங்கள். இரண்டு குழுக்களுக்கும் வித்தியாசம் இருக்கிறதா என்று கணக்கிட்டோம். புள்ளிவிவரங்களின்படி, இரண்டு குழுக்களிடையே (மாநிலங்களின்) வேறுபாடு இல்லை என்பதை நாங்கள் கண்டறிந்தோம். ஐந்து மாநிலங்களில் தொற்றுநோய் பரவுவதில் தேர்தல்கள் முக்கிய பங்கு வகிக்கவில்லை என தெரியவந்தது.
எங்கள் ஆய்வின் முடிவுகளை இதுவரை வெளியிடவில்லை, ஆனால் அதை எப்போதாவது வெளியிட விரும்புகிறோம்
தொடர்ந்து பேசிய அவர், அளவுருக்கள் தற்போது இருப்பதைப் போல வேகமாக மாறும்போது கணிப்புகளைச் செய்வது கடினமாகும். ஆனால் மும்பையைப் பொறுத்தவரை, மூன்றாவது அலை இந்த மாதத்தின் நடுப்பகுதியில் உச்சத்தை அடைய வாய்ப்புள்ளதை உறுதியாக கூறமுடியும். அது வெகு தொலைவில் இல்லை. டெல்லியிலும் நிலைமை அப்படித்தான் தெரிகிறது.
கொல்கத்தா பொறுத்தவரை, தகவல்களை வைத்து உறுதியாக கணிக்கமுடியவில்லை. ஆனால் அந்த நகரமும் இதே நேரத்தில் உச்சத்தை அடைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. ஒட்டுமொத்த நாட்டிற்கான உச்சம் பிப்ரவரியில் வரும்” என்றார்.
source https://tamil.indianexpress.com/india/third-wave-may-peak-in-delhi-mumbai-mid-jan-sutra-model-scientist/