11 1 2022 பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களின் பெயர்கள் இந்தியில் இடம் பெற்றிருப்பதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தை முதல் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் கொண்டாடும் வகையில், தமிழக அரசு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பினை ரேசன் அட்டை குடும்பதாரர்களுக்கு வழங்கி வருகிறது.
இந்த நிலையில், தமிழ்மீது மிகுந்த பற்றுடையது போல் காட்டிக்கொள்ளும் திமுக, தமிழர் திருநாளான பொங்கலையொட்டி, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பொங்கல் தொகுப்பு பொருட்களை வடமாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்திருப்பதும், அப்பொட்டலங்களில் இந்தி வார்த்தைகள் இடம்பெற்றிருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ’எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’, ’சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ்’, ‘இந்திய ஆட்சி மொழியாகத் தமிழ்’, ’தமிழில் அர்ச்சனை’, ‘இருமொழிக் கொள்கை’, ’இந்தி திணிப்பு எதிர்ப்பு’ என தமிழ் மீது மிகுந்த பற்றுடையது போல் காட்டிக்கொள்ளும் திமுக, தமிழர் திருநாளான பொங்கலையொட்டி, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பொங்கல் தொகுப்பு பொருட்களை வடமாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்திருப்பதும், அப்பொட்டலங்களில் இந்தி வார்த்தைகள் இடம்பெற்றிருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது என கூறியுள்ளார்.
கடந்த ஆட்சியில் பொங்கல் பரிசாக ரொக்கத் தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 21 சமையல் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுவதால் மக்கள் உற்சாகமிழந்துள்ளனர் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் குளறுபடிகள் நடப்பதாக நான் அறிக்கை வெளியிட்ட நிலையில், முதலமைச்சர் தானே நேரில் ஆய்வு செய்ததாகவும், சிலர் தவறான தகவல்களைப் பரப்புவதாகவும் கூறியிருந்தார். ஆனால் தரமற்ற பொருட்கள், எடை குறைவு, எண்ணிக்கை குறைவு உள்ளிட்ட நிகழ்வுகளைத் தான் நான் சுட்டிக் காட்டினேன். அதற்கான வீடியோ ஆதாரங்கள் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது. இந்த பொருட்களை சாப்பிட்ட சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. இதில் துணிப்பை பற்றாக்குறையை அரசே ஒப்புக் கொண்டுள்ளது. இதே அரசு பொறுப்பேற்றவுடன், மக்களுக்கு ரூ.4000 ரொக்கத்துடன் 14 மளிகைப் பொருட்கள் வழங்கியது, அதில் எந்தக் குறையும் இல்லாததால், யாரும் குறை சொல்லவில்லை. ஆனால் இப்போது குறை இருக்கிறது, அதான் சொல்கிறோம் என்று ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.
பொங்கல் பரிசுத் தொகுப்பில் மற்றொரு குறை என்னவென்றால், பெரும்பாலான பொருட்கள் வட மாநிலங்களிலிருந்தும், கர்நாடகாவிலிருந்தும் தான் கொள்முதல் செய்யப்பட்டு இருக்கின்றன. இவற்றில் சில பொருட்களின் பொட்டலங்களில் இந்தி, ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட மொழிகள் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால் சில பொருட்களின் பொட்டலங்களில் இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே இடம் பெற்றிருக்கிறது. தமிழ் இடம்பெறவில்லை. மேலும் பாதிப் பொருட்கள் எங்கிருந்து கொள்முதல் செய்யப்பட்டது என்பதற்கான விவரங்கள் இல்லை. நெடுஞ்சாலைகளில் இந்தியில் எழுதினால், இந்தி திணிப்பு எனக்கூறும் திமுக, மக்களின் வரிப்பணத்தில் வாங்கும் பொருட்களை வட மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்தும், அந்த பொருட்களின் பெயர்கள் இந்தியில் எழுதப்பட்டிருப்பதும் எந்த வகையில் நியாயம்? இந்தியை வரவேற்க திமுக முடிவு செய்துவிட்டதா? இந்த பொருட்களை விநியோகிக்க தமிழகத்தில் நிறுவனங்கள் இல்லையா? அவை லாபம் அடையக் கூடாதா? எனப் பல்வேறு கேள்விகளை ஓபிஎஸ் எழுப்பியுள்ளார்.
பொங்கல் பரிசுத் தொகுப்பை விட, ரொக்கத்தை தான் மக்கள் விரும்புகிறார்கள். மேலும் வேட்டி, சேலையும் எல்லோருக்கும் கிடைப்பதில்லை என்ற புகார்களும் வருகின்றன. எனவே இந்த முறைகேடுகள் மற்றும் குளறுபடிகள் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன் என ஓபிஎஸ் அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/admk-leader-ops-condemn-hindhi-at-pongal-gift-package-395376/