முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சென்னை அடையாறில் சாலை சீரமைக்கும் பணியை திடீரென ஆய்வு செய்துள்ளனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நள்ளிரவில் சென்னையில் சாலை சீரமைக்கும் பணிகளை ஆய்வு செய்ய வேண்டும் என மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார். இதையடுத்து, மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மாநகராட்சி அதிகாரிகளுடன் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அடையாறில் உள்ள டி.ஜி.எஸ் தினகரன் சாலையில் புதியதாக அமைக்கப்பட்டுவரும் சாலை பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தனர். தமிழக அரசின் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான தலைமைச் செயலாளர் இறையன்பு, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேசி மற்றும் துணை ஆணையர்கள் நேரில் சென்று சாலை அமைக்கும் பணி முறையாக நடைபெறுகிறதா, ஏற்கெனவே அமைக்கப்பட்ட பழைய தார் சரியான முறையில் அகழ்ந்தெடுக்கப்படுகிறதா என்று ஆய்வு செய்தனர்.
இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “அடையாறு மண்டலம், வார்டு-173க்குட்பட்ட டி.ஜி.எஸ்.தினகரன் சாலையில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் சாலையின் பணிகளை ஆய்வு செய்தார். சாலையின் மட்டம் சரியான முறையில் உள்ளதா, சரியான முறையில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதா என தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அரசு முதன்மை செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையாளர்கள் எம்.எஸ்.பிரசாந்த், சிம்ரன்ஜீத் உட்பட பலர் உடனிருந்தனர்.” என்று தெரிவித்துள்ளது.
மேலும், இறையன்பு, ககன்தீப் சிங் பேடி மற்றும் அதிகாரிகள் நள்ளிரவில் அடையாறு டி.ஜி.எஸ் தினகரன் சாலையில் சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்தபோது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளது.
சென்னையில் போக்குவரத்து அதிகம் இருக்கும் முக்கிய சாலைகளில், பகல் நேரத்தில் சாலை அமைக்கும் பணிகளை மேற்கொள்ள முடியாது என்பதால் நள்ளிரவில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், ஏற்கெனவே உள்ள பழையா தார்களை அரசு குறிப்பிட்டுள்ள ஆழத்துக்கு அகழ்ந்தெடுத்த பிறகே சாலை அமைக்க வேண்டும். ஆனால், அப்படி குறிப்பிட்ட அளவு பழைய தார்சாலையை அகழ்ந்தெடுக்கப்படுவதில்லை என்ற புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில்தான், முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சென்னை அடையாறில் சாலை சீரமைக்கும் பணியை திடீரென ஆய்வு செய்துள்ளனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/senior-ias-officers-inspects-road-work-in-chennai-at-midnight-cm-stalin-assignment-395429/