Public order: A constitutional provision for curbing freedoms: கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணியக்கூடாது என்று அம்மாநில அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மனுவை விசாரணை செய்து வருகிறது கர்நாடக உயர் நீதிமன்றம். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது நீதிபதிகள் பொது ஒழுங்கை மீறுவதாகக் கூறி தடையை அரசு நியாயப்படுத்த முடியுமா என்பது குறித்த வாதத்தை கேட்டனர்.
பொது ஒழுங்கு என்றால் என்ன?
மூன்று காரணங்களின் அடிப்படையில் அரசு மத சுதந்திரத்தை கட்டுப்படுத்தலாம். அதில் பொது ஒழுங்கும் ஒன்று. சுதந்திரமாக கருத்தை வெளிப்படுத்துதல் மற்றும் இதர அடிப்படை உரிமைகளையும் தடை செய்ய பொது ஒழுங்கு என்ற காரணி பயன்படுத்தப்படுகிறது.
பொது ஒழுங்கு, ஒழுக்கம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றிற்கு உட்பட்டு ஒரு மதத்தை பின்பற்றவும், கடைபிடிக்கவும், ஏற்றுக் கொள்ளவும், பிரச்சாரம் செய்யவும் இந்திய அரசியல் சாசனம் பிரிவு 25 உரிமைகளை வழங்குகிறது.
பொது ஒழுங்கு என்பது பொதுவாக மக்களின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு சமமாக கருதப்படுகிறது. இந்திய அரசியல் அமைப்பு சட்டம் ஏழாம் அட்டவணையின் கீழ், பொது ஒழுங்கு பட்டியல் இரண்டில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது பொது ஒழுங்கு அம்சங்களில் சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உள்ளது என்பதை இது குறிப்பிடுகிறது.
இது ஹிஜாப் தடையுடன் எப்படி ஒத்துப் போகிறது?
கர்நாடகா கல்விச் சட்டம், 1983-ன் கீழ் பிப்ரவரி 5-ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின்படி, கல்வி நிறுவனங்களில் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை காக்க மாணவிகளுக்கு ஹிஜாப் தடை விதித்ததற்கு பொது ஒழுங்கும் ஒரு முக்கிய காரணம் என்று குறிப்பிட்டிருந்தது.
ஹிஜாப் அணிவது எப்படி பொது ஒழுங்கிற்கு தீங்கு விளைவிக்கும் என்பதை அரசு மக்களுக்கு விளக்க வேண்டும் என்று மனுதாரர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இது ஒன்றும் ஆயுதங்களை எடுத்துச் செல்லும் பொதுக்கூட்டதைக் கொண்ட மத நடைமுறை அல்ல என்று மனுதாரர்களின் வழக்கறிஞர் தேவதத் காமத் கூறினார்.
ஹிஜாப் பொது ஒழுங்கிற்கு தீங்கு விளைவிப்பதா என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை அரசு கல்வி நிறுவனங்களுக்கு வழங்க முடியாது என்று மற்றொரு வாதமும் முன்வைக்கப்பட்டது. தனித்தனி கல்லூரி கமிட்டிகள் சீருடையை நிர்ணயம் செய்ய சுதந்திரம் உள்ள நிலையில், அத்தகைய விதிகள் இல்லாத பட்சத்தில் ஹிஜாப் தடை உத்தரவை அக்கல்லூரி மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என்று அரசாணை குறிப்பிட்டுள்ளது. பொது ஒழுங்கை அரசாங்கம் மட்டுமே மதிப்பீடு செய்ய முடியும் என்று காமத் வாதிட்டார்.
அரசு இதற்கு எப்படி பதில் அளித்தது?
கர்நாடகாவின் அட்வகேட் ஜெனரல், அரசாங்க உத்தரவில் பொது ஒழுங்கு குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும், மனுதாரர்கள் உத்தரவைப் படிக்கும் போது மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட பிழையாக அது இருக்கலாம் என்றும் வாதிட்டார். இந்த உத்தரவு கன்னடத்தில் சர்வஜனிக்க சுவ்யவஸ்தே (sarvajanika suvyavasthe) என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறது.
தலைமை நீதிபதி ரித்து ராஜ் அஸ்வதி மற்றும் இதர நீதிபதிகள் கிருஷ்ணா தீக்ஷித் மற்றும் ஜைபுனிஷா காஸி மூவருக்கும் கன்னட மொழி நன்றாக தெரியும். தீக்ஷிக் இது குறித்து குறிப்பிடுகையில், இந்த வார்த்தைகளுக்கான மனுதாரர்களின் புரிதல் முழுமையாக பொருந்தாது எனவே அதிகாரப்பூர்வ மொழி பெயர்ப்பை கொண்டு வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
அரசியலமைப்பின் அதிகாரப்பூர்வ கன்னட மொழிபெயர்ப்பு ஒன்பது நிகழ்வுகளிலும் “பொது ஒழுங்கு” என்பதற்கு “சர்வஜனிக்க சுவ்யவஸ்தே” பயன்படுத்தப்பட்டது.
பொது ஒழுங்கு என்பதற்கு நீதிமன்றங்கள் எவ்வாறு விளக்கம் அளிக்கின்றன?
பொது ஒழுங்கைப் பாதிக்கிறது என்பது சூழல் சார்ந்தது மற்றும் அரசால் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நீதிமன்றங்கள், ஒரு சில மனிதர்களை பாதிக்கும் நிலையை குறிப்பிடுவதற்கு பதிலாக, பரந்த அளவில் சமூகத்தை பாதிப்பது என்றே பொருள்படுத்துகிறது.
ராம் மனோகர் லோஹியா vs பீகார் மாநிலம் (1965) வழக்கில், ஒரு சமூகம் அல்லது அதிக அளவில் பொதுமக்கள் ஒரு குறிப்பிட்ட செயலால் பாதிக்கப்பட்டிருந்தால் அது பொது ஒழுங்கு விவகாரமாக கருதப்படும் என்று கூறியுள்ளது. சட்ட மீறல் எப்போதுமே ஒழுங்கைப் பாதிக்கும், ஆனால் அது பொது ஒழுங்கைப் பாதிக்கும் என்று கூறுவதற்கு முன்பு, அது சமூகத்தையோ அல்லது பொதுமக்களையோ பாதித்திருக்க வேண்டும். அப்போது தான் பொது ஒழுங்கு பிரச்சனை என்றே கூற முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
சட்டம் மற்றும் ஒழுங்கு என்பது பெரிய அளவு. அடுத்தது பொது ஒழுங்கு. மூன்றாவது மற்றும் சிரிய அளவு அரசின் பாதுகாப்பு என்று மூன்று வட்டங்களை ஒருவர் கற்பனை செய்து பார்த்து இதனை பொருள் உணர வேண்டும்.
பொது ஒழுங்கு என்பது சட்டம் ஒழுங்கை மீறுவது அல்ல. பொது ஒழுங்கு என்பது சட்டம் ஒழுங்கு பிரச்சினையை விட மிக அதிகமான இடையூறுகளின் ஒரு மோசமான வடிவமாகும் என்று மனுதாரர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
16 2 2022
source https://tamil.indianexpress.com/explained/public-order-a-constitutional-provision-for-curbing-freedoms-412215/