: ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு கிய்வில்உள்ள இந்திய தூதரகம் புதிய ஆலோசனைகளை வழங்கியுள்ளது. அதன்படி உக்ரைனில் தற்போது இராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் இப்போது பதற்றமான சூழல் நிலவி வருவதால் மக்கள் நடமாட கடினமாக சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் விமான சைரன்கள் மற்றும் வெடிகுண்டு எச்சரிக்கைகளைக் கேட்பவர்கள் அருகிலுள்ள வெடிகுண்டு பாதுகாப்பு மையங்களை கண்டறிந்து அங்கு சென்று பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
மேலும் “சில இடங்களில் வான் சைரன்கள்/வெடிகுண்டு எச்சரிக்கைகள் கேட்கின்றன என்பதை நாங்கள் அறிவோம். நீங்கள் அத்தகைய சூழ்நிலையை எதிர்கொண்டால், அருகிலுள்ள வெடிகுண்டு பாதுகாப்பு முகாம்களின் பட்டியலை கூகுள் மேப்ஸ் மூலம் கண்டறிந்து அங்கு செல்ல வேண்டும் என்றும், பெருநகரங்களில் பல நிலத்தடி பாதுகாப்பு முகாம்கள் அமைந்துள்ளன, ”என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் கியேவில் தங்குவதற்கு இடமின்றி தவிக்கும் மாணவர்களுக்கு உதவுவதற்காக தூதரகம் நிறுவனங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. “மிஷன் சூழ்நிலைக்கு சாத்தியமான தீர்வை அடையாளம் காணும் போது, தயவுசெய்து உங்கள் சுற்றுப்புறங்களைப் பற்றி எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருங்கள், அவசியமின்றி உங்கள் வீடுகளை விட்டு வெளியேறாதீர்கள் மற்றும் எல்லா நேரங்களிலும் உங்கள் ஆவணங்களை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்” என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, உக்ரைனுக்கான இந்திய தூதர் பார்த்தா சத்பதி, நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் அமைதியாக இருக்கவும், சூழ்நிலையை தைரியமாக எதிர்கொள்ளவும் வலியுறுத்தியுள்ளாா.. கியேவில் சிக்கித் தவிப்பவர்கள் அங்குள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையில், ரஷ்யா உக்ரைன் பிரதேசத்தில் குண்டு வீசத் தொடங்கியபோது, அந்நாட்டில் உள்ள இந்தியர்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகம் பல வழிகாட்டுதல்களை வெளியிட்டது. ரஷ்யாவுடனான இராணுவ மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில் உக்ரைனும் இன்று தனது வான்வெளி வழியை மூடியது. முன்னதாக, உக்ரைனில் இருந்து இந்தியர்களை வெளியேற்ற மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆனால் உக்ரைன் வான்வெளி மூடப்பட்டுள்ளதால், சிறப்பு விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக கிய்வில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ள நிலையில், “இந்திய குடிமக்களை வெளியேற்ற மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அத்தகைய ஏற்பாடுகள் இறுதி செய்யப்பட்டவுடன் தூதரகம் தகவல் தெரிவிக்கும், இதனால் இந்திய குடிமக்கள் நாட்டின் மேற்குப் பகுதிக்கு இடம்பெயர முடியும். உங்கள் பாஸ்போர்ட் மற்றும் தேவையான ஆவணங்களை எப்போதும் உங்களிடமே எடுத்துச் செல்லுங்கள்” என்று தூதரகம் ஆலோசனை கூறியுள்ளது.
இந்த போர் குறித்து மறற நாடுகளுக்கு எச்சிக்கை விடுத்துள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சர்வதேச கண்டனம் மற்றும் பொருளாதாரத் தடைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்த போர் குறித்து விவாகாரத்தில் தலையிடும் மற்ற நாடுகளன் எந்த முயற்சியும் “நீங்கள் எதிர்பார்த்திராத விளைவுகளுக்கு” வழிவகுக்கும் என்று கூறியுள்ளதால், உலக நாடுகளில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
source https://tamil.indianexpress.com/india/russia-and-ukraine-war-indian-embassy-to-citizens-safty-in-ukraine-416754/