27 2 2022
Ukraine Russia War Update : உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 4-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் மற்றும் குடிமக்களை மீட்கும் மத்திய அரசின் ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் உக்ரைனில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் உட்பட 219 இந்தியர்கள், ருமேனியாவில் உள்ள புக்கரெஸ்டில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தனர்.
மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் வந்திரங்கிய அவர்களை, பல மணிநேரம் காத்திருந்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வரவேற்றனர். ஆனாலும் சக பணியாளர்கள் மற்றும் நண்பர்கள் இன்னும் இன்னும் உக்ரைனில் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் முயறசியின் உள்ளனர்.
தற்போது இந்தியா திரும்பியவர்களில் பலர் செர்னிவ்சியில் உள்ள புகோவினியன் மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதில் மூன்றாம் ஆண்டு எம்பிபிஎஸ் படிக்கும் மாணவரான புனேவைச் சேர்ந்த 21 வயதான அவிஷ்கர் முலே கூறுகையில், “பல்கலைக்கழகத்திலிருந்து எங்களில் சுமார் 150 பேர் மீண்டும் அழைத்து வரப்பட்டுள்ளனர்,
ஆனால் இன்னும் 500 பேர் இன்னும் அங்கேயே சிக்கிக் கொண்டுள்ளனர். நாங்கள் ஒரு பேருந்தில் (ருமேனியாவுடன்) எல்லைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். எங்கள் பல்கலைக்கழகம் 40 கி.மீ தூரம் கடந்து எல்லைக்கு சென்றோம்.அங்கு ஏராளமான மக்கள் குவிந்ததால், எங்கள் பேருந்து 4-5 மணி நேரம் நிறுத்தப்பட்டது என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த வெண்ணெலா வர்ஷா, உள்ளிட்ட ஆந்திராவைச் சேர்ந்த மாணவர்களின் ஒரு பகுதியினர் கூறுகையில், நாங்கள் எளிதாக வெளியே வந்தபோதும், இரண்டாவது மற்றும் மூன்றாவது பேட்ச் மாணவர்கள் கனமான சாமான்களுடன் குளிரில் நடக்க வேண்டியிருந்தது. பல மாணவர்கள் இன்னும் பல்கலைக்கழகத்தில் சிக்கித் தவிக்கின்றனர் என்று கூறியுள்ளனர்.
இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதான சாக்ஷி ஷர்மா, கிழக்கு உக்ரைனில் சிக்கியவர்களைப் பற்றி கவலைப்படுகிறோம். “நாங்கள் மேற்கில் பாதுகாப்பாக இருந்தோம். ஆனால் பல இந்தியர்கள் கிழக்கு உக்ரைனில் சிக்கியுள்ளனர், அவர்களின் பாதுகாப்பிற்காக நான் பிரார்த்தனை செய்கிறேன் என்று கூறியுள்ளார்.
21 வயதான நாக்பூரின் ஹிமான்ஷு பவார் தனது எதிர்காலம் குறித்து குறித்தும் கவலை தெரிவித்துள்ளார். “எனது படிப்பை எப்படி முடிக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. உக்ரைனில் இருந்து வந்த ஊழியர் ஹர்ஷத் ரன்ஷேவ்ரே அதிக உணர்வுகளுடன் இருந்தார். மகள் காஷிமிரா, 22 வயது மற்றும் ஒரு மருத்துவ மாணவி, ஏர் இந்தியா விமானத்தில் திரும்பியபோது, மற்றொரு பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வரும் அவரது மகன் ஆதித்யா, (21) உக்ரைனின் போலந்து எல்லைக்கு அருகில் சிக்கிக் கொண்டார்.
“அவரது பல்கலைக்கழகம் போலந்து எல்லைக்கு அருகில் உள்ளது, அவர்கள் வெள்ளிக்கிழமை நடக்கத் தொடங்கினர். வெப்பநிலை மைனஸ் 3 டிகிரியாக இருந்ததால் இன்று போலந்து எல்லையை வந்தடைந்தனர். அங்கு சிக்கியுள்ள ஆயிரக்கணக்காக இந்தியர்கள் பசியால் வாடி வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக, ஒரு உக்ரேனிய குடும்பம் அவர்களை தங்கள் அடித்தளத்தில் தங்க அனுமதித்தது.. அவர்களையும் நம் அரசு காப்பாற்றும் என்று நம்புகிறேன்.
இப்போதைக்கு நிம்மதி இருக்கிறது. மேலும் அவர்களது குழந்தைகள் பாதுகாப்பாகவும், வீட்டில் இருப்பதாகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மோதல் வளையத்தில் இருந்து இந்திய மக்களை காப்பாற்றுவதற்கு விரைவாக நடவடிக்கை எடுத்ததற்காக பலர் இந்திய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தனர்.
உக்ரைனில் இருந்து திரும்பியவர்களை வரவேற்க மும்பை விமான நிலையத்திற்கு வந்திருந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மருத்துவ மாணவர்கள் உட்பட 219 பேரில் பெரும்பாலோர் பெண்கள், பத்திரமாக திரும்பி வந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். குறிப்பாக அவர்கள் கவனிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக மும்பை செல்லுமாறு பிரதமர் என்னைக் கேட்டுக் கொண்டார். அவர்களது குடியேற்றம் சுமூகமாக முடிந்து அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இந்த மாணவர்கள் காட்டும் துணிச்சல் தன்னம்பிக்கை இந்தியாவை பிரதிபலிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர், அவர் தலைமையில், தாங்கள் பாதுகாப்பாக இருப்பதை அவர்கள் அறிவார்கள்,” என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் உக்ரைனில் சிக்கியுள்ள ஒவ்வொரு இந்திய மக்களும் பாதுகாப்பாக நாடு திரும்புவதை உறுதி செய்வதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாகவும் கோயல் கூறியுள்ளார்.
இந்திய குடிமக்கள் பாதுகாப்பாக திரும்புவதை உறுதிசெய்ய ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மற்றும் ராணுவ அதிகாரிகள் அனைவரும் 24 மணி நேரமும் உழைத்து ஒவ்வொரு குடிமக்களையும் பத்திரமாகத் நாடு திரும்புவதை உறுதி செய்கிறார்கள் என்பதை அங்கு இருக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் நான் சொல்ல விரும்புகிறேன், ”என்று அவர் மேலும் கூறினார்.
source : https://tamil.indianexpress.com/india/russia-ukraine-war-219-step-off-first-flight-home-but-others-still-there-417518/