வெள்ளி, 18 பிப்ரவரி, 2022

அவசரமாக வந்த அறிவாலய பிரதிநிதி

 17 2 2022 த. வளவன்

தமிழகத்தின் எல்லை மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம். இம் மாவட்ட எல்லையில் இருந்து  கேரள மாநிலம் தொடங்குகிறது. தமிழகத்திலேயே அதிக கல்வியறிவு பெற்ற மாவட்டம். சிறிய மாவட்டம் என்றாலும் இங்கு மக்கள் நெருக்கமும் பணப் புழக்கமும் அதிகம். ஒரு காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த குமரி  மாவட்டம்  தமிழ்நாட்டுடன் இணைக்கப் பட்டது ஒரு வரலாறு.

நாஞ்சில் நாடு என்றழைக்கப்படும் குமரி மாவட்டத்தின் தலைநகர் தான் நாகர்கோவில்.  நகராட்சியாக இருந்த நாகர்கோவில் கடந்த 2018ல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மாநகராட்சி அந்தஸ்துக்காக நாகர்கோவிலை சுற்றியிருந்த சிறு கிராமங்களான கணியங்குளம், மேலசங்கரன்குழி, திருப்பதிசாரம், தேரேகால்புதூர் ஊராட்சிகள் நாகர்கோவிலுடன் இணைக்கப்படும் என அன்றைய அதிமுக அரசு அரசாணை வெளியிட்டும்  இன்று வரை அவை இணைக்கப்பட வில்லை.

ஆளூர், தெங்கம்புதூர் பேரூராட்சிகள்  இணைக்கப்பட்ட நாகர்கோவில் மாநகரின் மொத்த வார்டுகளின் எண்ணிக்கை 52. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை  2.5 லட்சம்.  மொத்தமுள்ள 52 வார்டுகளில் திமுக 37 வார்டுகளிலும் பாஜக 39 வார்டுகளிலும் காங்கிரஸ் 13 வார்டுகளிலும் மதிமுக 2 வார்டுகளிலும், அதிமுக 50 வார்டுகளிலும், தமாகா இரண்டு வார்டுகளிலும் போட்டியிடுகின்றன.

இதில் பாஜக தனியாகவும், திமுக காங்கிரஸ், மதிமுக கூட்டணியுடனும், அதிமுக தமாக கூட்டணியுடனும் போட்டியிடுகின்றன. மாநில அளவில் திமுக கூட்டணியில் இருக்கும் சிபிஎம் தொகுதிப்பங்கீட்டில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக தனியாக 9 வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறது. தேமுதிகவும் தனது பங்கிற்கு ஆங்காங்கே பத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது.

தமிழகத்திலேயே வித்தியாசமான கேரள சாயல் கொண்ட மாவட்டமான குமரி வாக்காளர்களின் மனநிலை சற்றே  வித்தியாசமானது. தமிழகத்திலேயே முதல் பாஜக எம்எல்ஏ-வை தேர்வு செய்த முதல் மாவட்டம் குமரி மாவட்டம். அதே மாதிரி தமிழகத்தின் முதல் பாஜக எம்பியும் குமரி மாவட்டத்திலிருந்தே தேர்வானார். பாஜக என்றில்லாமல் கம்யூனிஸ்டுகள் பலமாக இருக்கும் மாவட்டமும் இது தான். திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக, தமாக  என அனைத்து கட்சிகளுக்குமே குமரி மாவட்டத்தில் வாக்கு வங்கி உண்டு. இந்துக்களும், கிறிஸ்தவர்களும் சம அளவில் வசிக்கும் மாவட்டமும் இது தான். இப்படி ஒரு வித்தியாசமான மாவட்ட தலைநகரான நாகர்கோவில் மாநகராட்சிக்கு தான்  முதல் கன்னி மேயரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடக்கிறது.

கன்னி மேயர் கனவில் அனைத்து கட்சிகளுமே களத்தில் இருந்தாலும் முக்கிய  போட்டி திமுகவுக்கும் பாஜகவுக்கும் தான். கடந்த நாகர்கோவில் சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்தி சட்ட மன்ற உறுப்பினர்  ஆனவர் பாஜகவின்  மூத்த  அரசியல்வாதி எம்ஆர்காந்தி. எம்எல்ஏ பதவியை பறிகொடுத்தால் மேயர் பதவியை கைப்பற்றுவதை ஒரு மானப் பிரச்சனையாக கருதுகிறது திமுக.

குமரி மாவட்ட கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன் ,மேற்கு மாவட்ட செயலாளரும்  தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சருமான மனோ தங்கராஜ்  இருவருக்கும்  எப்போது உரசல்தான். இதனால் இரு தரப்பினருமே தத்தமது ஆதரவாளர்களை போட்டி வேட்பாளர்களாக  போட்டியிட செய்து உற்சாக படுத்த குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க தயாராகி வருகிறது பாஜக. இதனால் பல வார்டுகளில்  அதிகாரபூர்வ திமுக வேட்பாளர்களுக்கும் சீட் கிடைக்காத திமுக போட்டி வேட்பாளர்களுக்கும் போட்டி நிலவுகிறது.

உதாரணமாக 46 வது வார்டில் சீட் கிடைக்காத திமுக வட்ட செயலர் மாகின்  இப்போது  பாஜகவினர் கொடுத்த உற்சாகத்தில் திமுக வேட்பாளரை எதிர்த்து களத்தில் கலக்க இதனால் சிதறும் திமுக வாக்குகளால் பாஜக வேட்பாளர் சுயம்பு உற்சாகத்தில் இருக்கிறார்.

இது போல 39ம் வார்டில் இரண்டு முறை  கவுன்சிலராக இருந்த ஜியாவுதீன் தனது மனைவி ஷபீனாவுக்கு சீட் கேட்டார். அனால்  மாவட்ட செயலர் சுரேஷ் புதுமுக வேட்பாளர் பாத்திமா ரிஸ்வான் என்பவருக்கு சீட் கொடுத்தது விட இங்கும் முட்டல் மோதல். இது பாஜக வேட்பாளருக்கு சாதகமாக அமையலாம். இவை தவிர 3,11,15  வார்டுகளிலும் போட்டி வேட்பாளர்கள் சிலம்பம் வீசுகின்றனர். இதனால் பல வார்டுகளிலும் திமுகவின் வெற்றி கேள்விக்குறியாகி இருக்கிறது.

இதை தெரிந்து கொண்ட திமுக தலைமை சத்தமில்லாமல் தலைமைக்கு மிகவும் நெருக்கமான திமுக தலைமை நிலைய செயலாளரும் வீட்டு வசதி வாரிய தலைவருமான  பூச்சி முருகனை ரகசியமாக நாகர்கோவிலுக்கு அனுப்பி வைத்திருக்கிறது. அவரும் ரகசியமாக  தனது வெளிப்படையான அணுகுமுறையால் போட்டி வேட்பாளர்களிடம் பேசி அவர்களை சமாதானம் செய்து திமுகவின் வெற்றி தான் நமக்கு முக்கியம். தயவு செய்து கோஷ்டி அரசியல் வேண்டாம் என பேச்சுவார்த்தை  நடத்தியிருப்பதாக தகவல். இதனால் உற்சாகத்துடன்  வேலையை தொடங்கி இருக்கின்றனர் திமுகவினர்.

வழக்கறிஞர் மகேஷ் மற்றும் மேரி ஜெனட்

மேயர் ரேசில் முக்கியமான நபர்  குமரி மேற்கு  மாவட்ட செயலாளர் மற்றும்  அமைச்சர் மனோதங்கராஜ் ஆதரவாளரான வழக்கறிஞர் மகேஷ். இவர் நாகர்கோவில் மாநகர செயலாளராக இருக்கிறார். கட்சி பலம், இவரது வழக்கறிஞர் பலம், கட்சிக்காரர்களின் நெருக்கம் தவிர பணபலமும் இவரை மேயர் வேட்பாளராக முன்னிறுத்துகின்றன. இவரது ஒரே மைனஸ் கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் தனது வேட்பாளராக மேரி ஜெனட் விஜிலாவை முன்னிறுத்துவது தான். இவரது கணவர் ஜெயசிங் தொடர்ந்து மூன்று முறை கவுன்சிலராக இருந்தவர். மேலும் இதே விஜிலா கடந்த நகராட்சி தலைவர் நேரடி தேர்தலில் குறைந்த வாக்குகளில்  பாஜக வேட்பாளர் மீனா தேவியிடம் பதவியை இழந்தவர். திமுக அதிகப் படியான வார்டுகளை கைப்பற்றும் பட்சத்தில்  இவர்களில் ஒருவர் நாகர்கோவில் மேயராக வாய்ப்பு இருக்கிறது.

அடுத்ததாக களத்தில் முன்னிலை வகிப்பது பாஜக வேட்பாளர் முன்னாள் நாகர்கோவில் நகராட்சி தலைவர் மீனா தேவ். முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் முன்னிறுத்தும் வேட்பாளரான  இவர் இரண்டு முறை பாஜக சார்பில் போட்டியிட்டு நகர்மன்ற தலைவராக அனுபவம் கொண்டவர்.

மீனாதேவ் மற்றும் முத்துராமன்

திராவிடக் கட்சிகளின் கோஷ்டி பூசலுக்கு சவால் விடும் வகையில் பாஜகவிலும்  இரு அணிகள் செயல்பட்டு வருகின்றன. நாகர்கோவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி தனது ஆதரவாளரான முத்துராமன் என்பவரை மேயராக்க விரும்புவதாக ஒரு தகவல் இருக்கிறது. நாகர்கோவில் மாநகராட்சியில் பாஜக பெரும்பான்மையான கட்சியாக உருவெடுத்தால்  மீனாதேவ் மேயராக அதிக வாய்ப்பு இருக்கிறது.

ஸ்ரீவிஜா மற்றும் மோஷிதையான்

அதிமுகவை பொறுத்தவரை மாநகராட்சியில் பெரும்பான்மை கிடைக்கும் வாய்ப்பு இல்லையென்றாலும் முன்னாள் எம் எல் ஏ நாஞ்சில் முருகேசனின் மகள் ஸ்ரீவிஜா , 18ஆவது வார்டில் தனிப்பட்ட செல்வாக்குடன் இருக்கும் அதிமுக  வேட்பாளர் மோஷிதையான் , 8 வது  வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சேகர், 32 வைத்து வார்டு ராதிகா, 25 வது வார்டு அக்சயா கண்ணன், 27 வது வார்டு கோபால் சுப்பிரமணியன் போன்றவர்கள் திமுக, பாஜகவுடன் மோதுகின்றன. இவர்களில் மோஷிதையான், ஸ்ரீஜா வெற்றி பெறும்  வாய்ப்பு இருக்கிறது. இதில் ஸ்ரீஜா அதிமுகவின் மேயர் வேட்பாளராக முன்னிறுத்தப் படுவதாகவும் இவர் வெல்லும் பட்சத்தில் மறைமுதத் தேர்தலில் தனது மகள் ஸ்ரீஜாவை மேயராக்கினால் வாக்களிக்கும் கவுன்சிலருக்கு ரூ. 5 லட்சம் பணமும் 5 சென்ட் நிலமும் தருவதாக முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஆசை காட்டி வைத்திருப்பதாகவும் ஒரு தகவல். இதை தெரிந்து கொண்ட பாஜக அதே வார்டில் நாஞ்சில் முருகேசனின் மருமகள் திவ்யாவை பாஜக வேட்பாளராக்கி பரபரப்பை அதிகப் படுத்தி இருக்கிறது.

நாகர்கோவில் மாநகர் 37 வது வார்டில் தமாக வேட்பாளர் டிஆர்  செல்வம் தனது தனிப்பட்ட செல்வாக்கால் திமுக, பாஜக வேட்பாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தி வருவது தமாகவினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனால் அதிமுகவினரும்  கூட்டணி கட்சி என்ற அடிப்படையில் இவருக்கு உற்சாகம் கொடுக்கின்றனர்.

நாகர்கோவில் மாநகராட்சியின் கன்னி மேயராக திமுக, பாஜக இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் நெருக்கமாக துரத்துகின்றனர். இதில் மலரப் போவது தாமரையா, சூரியனா  என்பது அடுத்த வாரம் தெரிந்து விடும்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-urban-local-body-elections-2022-kanyakumari-mayor-candidates-list-412813/