28 2 2022
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கனமழையால் பெருக்கெடுத்த வெள்ளத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள சன்ஷைன் கடலோர பகுதிகளில் புயல் காற்று வீசி வருவதன் எதிரொலியாக தொடர் கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் 4.6 அடி உயரம் வரை வெள்ளம் சூழ்ந்திருப்பதால் வீட்டை விட்டு வெளியே செல்லமுடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். வாகன போக்குவரத்தும் வெகுவாக பாதிப்படைந்துள்ளது.
மீட்புப்படையினர் குவிக்கப்பட்டு வெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் வடகிழக்கில் பெருகிய திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
வாகனத்துடன் நீரில் மூழ்கிய பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பிரிஸ்பேன் நகரில் கார்களும் கட்டடங்களும் வெள்ளத்தில் மூழ்கியதோடு, 1,400க்கும் அதிகமான வீடுகளில் வெள்ளம் புகுந்ததாக கூறப்படுகிறது. பல்லாயிரம் வீடுகளில் மின்சார விநியோகம் தடைபட்டுள்ளது. முக்கிய நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
நகரில் உயர்ந்துவரும் நீர்மட்டம் அந்த வட்டாரத்தில் வெள்ளத்தை அதிகரிக்கும் என்னும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. தென்கிழக்கு மாநிலமான குவீன்ஸ்லந்தில் எந்நேரமும் பெருமழை கொட்டித் தீர்க்குமென வானிலை அதிகாரிகள் ஏற்கனவே எச்சரித்தனர்.
தற்போது அங்கே கடுமையான வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் மூன்றாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகரமான பிரிஸ்பேனின் சில பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. கிழக்கு கடற்கரை பகுதிகளில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
நேற்று பிரிஸ்பேனின் வடக்கு பகுதியில் 59 வயதுடைய முதியவர் ஒருவர் வெள்ளத்தில் மூழ்கிய சிறிய ஓடையை கடக்க முயன்று நீரில் மூழ்கி இறந்ததாக குயின்ஸ்லாந்து மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.பொதுமக்கள் பாதுகாப்பாகவும், குடியிருப்பவர்கள் தாங்கள் இருந்த இடத்திலேயே தங்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று (ஞாயிற்றுகிழமை) முதல் பிரிஸ்பேன் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உதவிக்காக 100 க்கும் மேற்பட்ட அவசரகாலக் குழுக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரிஸ்பேன் புறநகர்ப் பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 2300 க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், முக்கிய சாலைகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், பிரிஸ்பேன் முழுவதும் ரயில் மற்றும் படகு சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
source https://news7tamil.live/australia-floods-7-dead.html