26 2 2022
Russian troops seize control of Chernobyl nuclear disaster site: தீவிரமான ஆனால் சிறிது நேரம் நடைபெற்ற போராட்டத்திற்கு பிறகு ரஷ்ய துருப்புகள் வடக்கு உக்ரைனில் உள்ள செர்னோபில் அணு உலையை கைப்பற்றினர். மனித வரலாற்றில் மிக மோசமான அணு உலைப் பேரழிவு நடைபெற்ற இடம் இது. உக்ரைன் மீது வன்முறை தாக்குதலை நடத்த ஆரம்பித்த முதல் நாளிலே ரஷ்ய ராணுவம் உக்ரைனில் உள்ள இந்த அணு உலையை கைப்பற்றி அங்கே இருந்த சில ஊழியர்களை பிணைக் கைதிகளாக பிடித்துள்ளனர் என்று உக்ரைன் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த தாக்குதல் எந்த வகையிலும் எதிர்பாராத ஒன்று அல்ல. வியாழக்கிழமை அன்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, அணு உலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ரஷ்ய படை முயலுகிறது என்று எச்சரிக்கை செய்தார். ரஷ்யா தொடர்ந்து தன்னுடைய படையெடுப்பை தீவிரப்படுத்தினால் மற்றொரு அணு ஆயுதப் பேரழிவு ஏற்படும் என்றும் உக்ரேன் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை செய்தார். 1986ம் ஆண்டு உலகம், செர்னோபிலில் தொழில்நுட்பக் கோளாறால் உருவான பேரழிவை சந்தித்தது. ரஷ்யா தொடந்து படையெடுப்பை தீவிரப்படுத்தினால் மற்றொரு செர்னோபில் 2022-ல் ஏற்படும் என்று 80களில் ஏற்பட்ட அணு உலை வெடிப்பை குறிப்பிட்டார். இந்த விபத்தில் சிக்கி ஆயிரக் கணக்கான மக்கள் மாண்டு போனார்கள்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மனிதர்கள் வாழ தகுதியற்ற ஒரு இடத்தில், தொடர்ந்து காற்றும் மண்ணும் கூட கதிரியக்கத்தை வெளியேற்றும் ஒரு பகுதியை ரஷ்ய ராணுவம் கைப்பற்றக் காரணம் என்ன? விளக்குகிறது இந்த கட்டுரை.
செர்னோபில் அணு உலை எங்கே அமைந்துள்ளது?
செர்னோபில் நகரில் இருந்து 16 கி.மீ தொலைவிலும், தலைநகர் கிவில் இருந்து 100 கி.மீக்கு அப்பாலும் அமைந்துள்ளது இந்த அணு உலை. 1986ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-26 தேதியில் பாதுகாப்பு ஆய்வுகளை ஆராய்ச்சியாளர்கள் இங்கே மேற்கொண்டனர். அப்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறின் காரணமாக செர்னோபிலின் நான்காவது உலை வெடித்து சிதறியது. அணு உலையின் பாதி பகுதி உருக்குலைந்து போன நிலையில் அங்கே ஆய்வுக்காக வைக்கப்பட்டிருந்த கதிரிக்க பொருட்கள் புகை மண்டலமாக செர்னோபில் முழுவதும் சிதறி பரவியது.
சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் கூற்றுப்படி, ஆரம்ப வெடிப்பில் இரண்டு தொழிலாளர்கள் இறந்தனர், அதே நேரத்தில் 28 தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசரகால சுத்தப்படுத்தும் தொழிலாளர்கள் என அடுத்த மூன்று மாதத்தில் கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்தனர். ஒருவர் மாரடைப்பால் மரணம் அடைந்தனர். கதிர்வீச்சு பாதிப்பால் 4000க்கும் அதிகமானோர் இறந்திருக்கக் கூடும் என்று ஐ.நா. 2005ம் ஆண்டு தோராய மதிப்பை வெளியிட்டதாக பி.பி.சி. செய்தி கூறுகிறது. இந்த கதிர் வீச்சின் தாக்கம் அண்டை நாடான பெலாரஸ் மற்றும் ரஷ்யா, ஐரோப்பாவின் இதர பகுதிகளிலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விபத்து எத்தகைய மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்று கேட்டால், ஜப்பானின் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணு குண்டுகளைக் காட்டிலும் 400 மடங்கு அதிக கதிரியக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த விபத்து ஏற்பட்டது. ஆரம்பத்தில் இந்த பேரழிவை ஆரம்பத்தில் ரஷ்யா மூடி மறைக்கப் பார்த்தது. ஆனால் ஸ்வீடன் அதிகாரிகள் தொடர்ந்து ரஷ்யாவில் கதிரியக்க அளவுகள் அதிகமாக இருப்பது தொடர்பாக எச்சரிக்கை விடுக்கவும் பின்னர் ரஷ்யா ஒப்புக் கொண்டது. இந்த விபத்து ஏற்பட்ட ஒரு சில ஆண்டுகளில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது. சோவியத் ஒன்றியம் உடைபட முன்வைக்கப்பட்ட காரணங்களில் செர்னோபில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
அணு உலையை சுற்றி உள்ள 32 கி.மீ பரப்பளவு எக்ஸ்க்ளூசன் ஜோன் என்று வரையறை செய்த உக்ரைன் 2000ம் ஆண்டில் மீதம் இருக்கும் 3 உலைகளையும் மூடியது. இந்த பகுதியில் மக்கள் யாரும் வாழ்வதில்லை. தடுப்பு சுவர் பாதிக்கப்பட்ட அணு உலையை சுற்றிலும் எழுப்பப்பட்டுள்ளது. ஆனாலும் அப்பகுதியில் கதிரியக்கத்தின் அளவானது அதிகமாகவே உள்ளது.
ரஷ்யா செர்னோபிலை கைப்பற்ற காரணம் என்ன?
திட்டமிடாமல் நடைபெற்ற நிகழ்வல்ல இது. ரஷ்ய எல்லையில் இருந்து கீவை அடையும் மிகச்சிறிய தொலைவு செர்னோபிலை கடந்தே செல்கிறது. இந்த பகுதியில் பாதுகாப்பு படையை உக்ரைன் அரசு ஒரு மாதத்திற்கு முன்பு அனுப்பி வைத்தது.
ரஷ்ய அதிபர் புடின் படையெடுப்பை அறிவித்த உடனே ரஷ்ய சிறப்பு படையினர் ஆலையை கைப்பற்றும் முனைப்பில் ஈடுபட்டனர். ரஷ்ய வீரர்கள் உக்ரைன் எல்லையை தாண்டுவதற்கு முன்பே அந்த சிறப்புப் படை வியாழக்கிழமை அன்று செர்னோபில்லை அடைந்து விட்டதாக கூறியது. உக்ரேனிய அதிபரின் ஆலோசகர் மிக்கைலா போடோல்யாக், ஒரு தீவிரமான சண்டைக்கு பிறகு ரஷ்ய படையினர் செர்னோபில்லை கைப்பற்றியுள்ளனர் என்று கூறினார். முகநூல் பதிவு ஒன்றில் உக்ரேனிய அதிகாரி ஒருவர் ஆலையின் சில முக்கிய ஊழியர்களை பிணைக்கைதிகளாக ரஷ்ய வீரர்கள் பிடித்து வைத்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
செர்னோபிலை கைப்பற்றியது ஏற்கனவே திட்டமிட்டப்பட்ட உக்தியின் ஒரு முடிவாகும். இதன் மூலம் ரஷ்ய வீரர்கள், ரஷ்யாவின் கூட்டணி நாடான பெலாரஸில் இருந்து கீவை விரைவில் அடைய முடியும். செர்னோபில் கீவை நோக்கி செல்லும் வழியில் அமைந்திருப்பதால் செர்னோபிலை கைப்பற்றியிருப்பது ரஷ்யாவின் காலாட்படை வீரர்கள் முன்னோக்கி செல்வதற்கு உறுதுணையாக இருக்கும் என்று ராணுவ ஆய்வாளர்கள் குறிப்பிட்டுகின்றனர்.
அச்சமூட்டும் காரணி என்ன?
உலை எண் 4 எஃகு மற்றும் கான்க்ரீட் கட்டிடத்தால் சுற்றிலும் மறைக்கப்பட்டுள்ளது. புதிய பாதுகாப்பு கட்டிடம் என்று இதை வரையறுத்தாலும், ஒரு சூறாவளிக் காற்றையே தாங்கும் சக்தியை இது கொண்டிருக்கிறது என்றாலும் கூட இதன் கீழ் 200 டன் கதிரியக்க பொருட்கள், சேதமடைந்த கட்டிடத்திற்கு அடியே உள்ளது என்று நம்பப்படுகிறது.
படையெடுப்பு துவங்கிய சில மணி நேரத்தில் உக்ரேனின் நியூக்ளியர் ஏஜென்ஸி, மூடப்பட்ட அணு ஆலையை சுற்றியுள்ள பகுதியில் கதிர் வீச்சின் அளவு அதிகரித்துள்ளது என்று கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பெலாரஸில் இருந்து கீவை அடைய செர்னோபில் வழியாக தளவாடங்களைக் கொண்டு வருவதால் உருவாகிய தூசி படலத்தின் மூலமாக கதிரியக்க அளவு அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது.
தி டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இந்த பகுதிகளில் ராணுவ வீரர்கள் அதிக அளவில் நேரத்தை செலவழிக்கவில்லை என்றால் அவர்கள் கதிர் வீச்சால் பாதிக்கப்படும் அபாயம் குறைவாகவே இருக்கும் என்று கூறியுள்ளது. அணுக்கழிவு சேமிப்புக் கிடங்களில் ஏதேனும் சேதத்தை ரஷ்ய ராணுவ வீரர்கள் ஏற்படுத்தினால், அதனால் உருவாகும் கதிரியக்கத்தை உக்ரைன் மட்டுமின்றி பெலராஸ், ரஷ்யா, ஐரோப்பாவின் பல பகுதிகளும் உணரக்கூடும் என்று செய்தி வெளியிட்டுள்ளது தி டைம்ஸ்.
அனைத்து இயற்கைப் பேரிடர்களையும் எதிர்த்து நிற்கும் வகையில் தான் புதிய பாதுகாப்பு சுவர் எழுப்பப்பட்டுள்ளது. ஆனாலும் முழு வீச்சில் நடைபெறும் போரில் இந்த பகுதியில் ஒரு சிறிய வெடிகுண்டு வீசப்பட்டாலும் பிரச்சனை உலக அளவில் தீவிரமடையும் . ஏற்கனவே சிதிலம் அடைந்துள்ள அணு உலையை தகர்ப்பதால் இரு நாட்டிற்கும் எந்த வகையான நன்மையும் இல்லை.
source https://tamil.indianexpress.com/explained/why-did-russian-troops-seize-control-of-chernobyl-nuclear-disaster-site-417209/