ஊழல், வேலைவாய்ப்பின்மை குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஏன் பேசுவதில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்
பஞ்சாப்பில் மொத்தமுள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 20ம் தேதி, தேர்தல் நடைபெற உள்ளது. இதை ஒட்டி அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. பஞ்சாபின் ஹோஷியார்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பாஜக ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் வைக்கப்படும் என நாடாளுமன்றத் தேர்தலின்போது நரேந்திர மோடி கூறியது என்ன ஆனது என கேள்வி எழுப்பினார்.
இதேபோல், 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்ற வாக்குறுதியை நரேந்திர மோடி நிறைவேற்றினாரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஊழல் குறித்தும், வேலைவாய்ப்பின்மை குறித்தும் நரேந்திரமோடி ஏன் பேசுவதில்லை என கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, பாஜக அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் GST-யால் யார் பயன் அடைந்தார்கள் என்றும் வினா எழுப்பினார்.
3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யக் கோரி, டெல்லியில் ஒரு வருட காலமாக விவசாயிகள் போராட்டம் நடத்தியதை சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, போராட்டத்தின் போது உயிர் நீத்த விவசாயிகளுக்காக நாடாளுமன்றத்தில் 2 நிமிடம் கூட அஞ்சலி செலுத்தாதது ஏன் என கேள்வி எழுப்பினார். ஆனால், காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் சட்டப்பேரவைகளில் உயிர் நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, அவர்களின் குடும்பங்களுக்கும் நிதி உதவி அளிக்கப்பட்டதையும் ராகுல் காந்தி சுட்டிக்காட்டினார்.
source https://news7tamil.live/why-did-the-prime-minister-not-talk-about-corruption-and-unemployment-rahul-gandhi.html