வியாழன், 17 பிப்ரவரி, 2022

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: நோட்டா, விவிபேட் சீட்டு இல்லை ஏன்?

 தமிழ்நாட்டில் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நோட்டா அளிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலத் தேர்தல் ஆணையம் அடுத்த தேர்தலில் நோட்டா விருப்பமாக சேர்க்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தல், மக்களவைத் தேர்தல்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லாத வாக்காளர்கள் நோட்டாவில் தங்கள் வாக்கை பதிவு செய்யலாம். இதன் மூலம் ஒருவருடைய வாக்கை வேறு ஒருவர் செலுத்த முடியாது. அதனால், இதனால், வாக்கு இயந்திரங்களில் நோட்டா விருப்பத் தேர்வாக இருந்தது. ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் நோட்டா விருப்பம் அளிக்கப்படவில்லை.

இந்த முறை நோட்டா மற்றும் வி.வி,பேட் சீட்டுகள் இல்லை என்று அரசியல் கட்சிகளுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கு காரணம், தேர்தல் விதிகளில் உரிய விதிகள் இல்லாததே முதன்மைக் காரணம் என மாநிலத் தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகிறார். தமிழ்நாடு பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் தேர்தல் விதிகள் 2006ல் எந்தவித விதிகள் திருத்தம் அறிவிப்பையும் வெளியிட மாநில அரசிடம் உள்ளது. விதிகள் திருத்தம் அரசாங்கத்தின் ஒப்புதலுடன் செய்யப்பட வேண்டும். வாக்கெடுப்பு செயல்முறை முடிந்ததும் இந்த விஷயம் தொடரப்படும். உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் இது தொடர்பான நடவடிக்கை தொடரும் என்று தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் உள்ளாட்சித் தேர்தலில் நோட்டா விருப்பம் உள்ளது. ஒடிசா இந்த பட்டியலில் சமீபத்தில்தான் சேர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில், 2013ல், ஏற்காடு சட்டசபை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், நோட்டா அறிமுகப்படுத்தப்பட்டது. 2014, 2019 மக்களவைத் தேர்தல்களில், நோட்டாவில் வாக்களித்தவர்களின் விகிதம் 1.4% முதல் 1.8% வரை இருந்தது. சுமார் 5.5 லட்சம் பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். 2016 தேர்தலில் நோட்டாவில் 1.3% வாக்காளர்கள் அதாவது சுமார் 5.6 லட்சம் பேர் தங்கள் வாக்குகளை பதிவு செய்திருந்தனர். இருப்பினும், நோட்டாவில் வாக்களிப்பது என்பது ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சுமார் 0.75% ஆகக் குறைந்தது. அதன்படி, சுமார் 3.46 லட்சம் பேர் நோட்டாவில் வாக்களித்தனர்.

உள்ளாட்சித் தேர்தலில் நோட்டா தொடர்பான கொள்கையுடன் உடன்படும் அதே வேளையில், எந்தவொரு சீர்திருத்த நடவடிக்கையையும் மேற்கொள்வதற்குப் பதிலாக, தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் நிர்ணயித்த காலக்கெடுவில் குழு அதிக கவனம் செலுத்தியுள்ளது என்று மாநிலத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகின்றனர். நோட்டாவை சேர்க்காததற்கு நேரமின்மை மற்றொரு காரணம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த முறை நோட்டா அல்லது வாக்காளர் வாக்களித்ததை சரிபார்க்கும் வி.வி.பேட் சீட்டுகள் கிடைக்காது என்று அரசியல் கட்சிகளுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிய உள்ளாட்சி அமைப்புகளில் நோட்டாவை செயல்படுத்துவதில் உண்மையாக சிரமங்கள் உள்ளன. உதாரணமாக, 10 வேட்பாளர்களைக் கொண்ட ஒரு பேரூராட்சி வார்டில் சுமார் 1,000 வாக்காளர்கள் இருந்தால், எந்த வேட்பாளரை விடவும் நோட்டா அதிக வாக்குகளைப் பெறும் வாய்ப்பை நிராகரிக்க முடியாது. அத்தகைய சூழ்நிலையை கையாள்வதற்கான வழிகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

உள்ளாட்சி தேர்தல்களில் நோட்டாவை விருப்பமாக சேர்ப்பது உள்ளாட்சி அமைப்புகளின் சட்டங்கள் மற்றும் விதிகளில் உள்ள பிரச்சனைகள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, மகாராஷ்டிராவிலும் இருந்தது. இந்த பிரச்னைகளை சுட்டிக்காட்டி, மகாராஷ்டிரா மாநிலத் தேர்தல் ஆணையம் நவம்பர் 6, 2018-ல் தனது உத்தரவில் இந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு அதன் முழு அதிகாரங்களைப் பயன்படுத்துவதை தடை செய்யவில்லை என்று கூறியது. நோட்டா ஒரு கற்பனையான தேர்தல் வேட்பாளராகக் கருதப்படும் என்று அறிவித்த குழு, எந்தவொரு தேர்தலிலும், அனைத்து போட்டியாளர்களும் நோட்டாவை விட தனித்தனியாக குறைவான வாக்குகளைப் பெற்றால், யாரும் வெற்றியாளராக அறிவிக்கப்பட மாட்டார்கள். மேலும், புதியதாக தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தது. இரண்டாவது சுற்றில், வேட்பாளர்களைவிட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தால், அதிக வாக்குகள் பெற்ற போட்டியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார். அதேபோல், முதல் சுற்றிலே, எந்த வேட்பாளருக்கும் நோட்டாவுக்கும் இடையே சமமான வாக்குகள் பெற்றிருந்தால் வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.

ஆனால், உள்ளாட்சி தேர்தல்களில் வாக்காளர்களுக்கு நோட்டா விருப்பத் தேர்வு உரிமை அளிக்கப்படாதது குறித்து செயல்பாட்டாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், உள்ளாட்சித் தேர்ஹ்டலில் தற்போதைய விதி – மாநில விதிகளின் பிரிவு 71 (இது லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் விதிகள், 1961 49-O நடத்தை விதிகளுக்கு நிகரானது) உள்ளது. இந்த படிவத்தை கட்சி முகவர்கள் முன்னிலையில் நிரப்ப வேண்டும் என்பதால், அதைப் பயன்படுத்துபவர்களின் அடையாளம் வெளிப்பட்டுவிடும். ஆனால், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் நோட்டா இருந்தால் எந்த பிரச்சனையும் இருக்காது என்றும் செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

இந்த குரல்களை பரிசீலனை செய்யும் மாநிலத் தேர்தல் ஆணையம், அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தல்களில் நோட்டா விருப்பத் தேர்வாக சேர்க்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/nota-and-vvpat-slips-no-this-time-local-body-elections-412388/