கனரக வாகன ஓட்டுநர்களின் போராட்ட எதிரொலியால் கனடாவில் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த அவசரநிலை சட்டம் திரும்பப்பெறப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
கனடாவில் கொரோனா பரவலை தடுக்க பொது இடங்களில் நடமாடுவோர், பொது போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டது. மேலும், அமெரிக்காவில் இருந்து வரும் லாரி ஓட்டுநர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என்றும், தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் அரசு உத்தரவிட்டது.
இந்த அறிவிப்பை எதிர்த்து லாரி ஓட்டுநர்கள் ஒட்டாவாவில் உள்ள முக்கிய சாலைகளில் வாகனங்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதற்கிடையே, போராட்டத்தை ஒடுக்கும் விதமாக கடந்த 15ம் தேதி நாடு முழுவதும் அவசரநிலை சட்டத்தை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார்.
இதனை தொடர்ந்து போராட்டக்காரர்களின் லாரிகள், தற்காலிக கூடாரங்களை போலீசார் அப்புறப்படுத்தியதால் அங்கு நிலவி வந்த அமைதியற்ற சூழல் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், லாரி ஓட்டுநர்களின் போராட்டம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, கனடாவில் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த அவசரநிலை சட்டம் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
source https://news7tamil.live/cancellation-of-the-state-of-emergency-in-canada.html