27 2 2022
பிப்ரவரி 19 அன்று, பெரியார் வேடமணிந்த குழந்தை , தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெரியாரின் கருத்துகளை பகிர்ந்திருந்தது. குழந்தையில் பேச்சு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்ததோடு, முதல்வர் மு.க.ஸ்டாலினின் பாராட்டையும் பெற்றது.
இந்நிலையில், பெரியார் வேடமிட்ட குழந்தையை அடித்துக் கொன்று விட வேண்டும் என்ற பேஸ்புக் பதிவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த வெங்கடேஷ்குமார் பாபு என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில், “பெரியார் வேஷம் போட்ட இந்த குழந்தையை அடித்து கொன்று நாலு முக்கு ரோட்டில் தூக்கில் தொங்கவிட வேண்டும் அப்போது தான் மத்த குழந்தைகளுக்கும் அவர்கள் பெற்றோருக்கும் பயம் வரும். ஏன் வவுசி, தேவர் பாரதி நேதாதி போன்ற வேஷம் போட முடியாதோ” என பதிவிட்டிருந்தார்
இந்தப் பதிவு குறி்தது கயத்தாறு காவல் நிலையத்தில் திமுக நகர மாவட்டச் செயலர் சுரேஷ் கண்ணன் அளித்த புகாரின் பேரில், ஓட்டுநராகப் பணிபுரியும் 36 வயதான வெங்கடேஷ்குமாரை காவல் துறையினர் கைது செய்தனர்.
புகாரளித்த கண்ணன் கூறுகையில், இந்தப் பதிவு கடுமையான சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்துவது மட்டுமின்றி குறிப்பிட்ட சமூகத்தினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்றார்.
இதுகுறித்து தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் கூறுகையில், ” சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளம் அல்லது சுவோரட்டிகள் மூலம் கருத்துகளை பகிர முயற்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
வெங்கடேஷ் குமார் மீது கொலை மிரட்டல், சாதி, மதம், இனம் தொடர்பான உணர்ச்சிகளைத் தூண்டுதல், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அச்சமூட்டுதல், மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வெங்கடேஷ் பாபு சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக, பெரியார் கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளை தலைமை செயலகத்திற்கு வரவழைத்த முதல்வர் ஸ்டாலின், அவர்களை நேரில் பாராட்டினார். மேலும், அவர்களுக்கு திருவள்ளுவரின் உருவச்சிலையையும் பரிசளித்தார்.