17 2 2022 சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இது குறித்து பொதுத் தளத்தில் வெளியிடப்படும் என்றும் தமிழக அரசு நேற்று (புதன்கிழமை) சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை அகற்ற தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் 2017-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியதோடு, அந்த பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தப்போது, தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி டி.பாரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் முன்பு ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.சிலம்பண்ணன், சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு விரைவில் விரிவான திட்டம் வகுக்கப்படும் என்றார்.
சீமை கருவேல மரங்களை நாட்டிலுள்ள பிற மாநிலங்கள் எவ்வாறு கையாள்கின்றன என்பதை ஆய்வு செய்து, அங்கு பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளை பின்பற்றுமாறு கூடுதல் அட்வகேட் ஜெனரல் மற்றும் நீதிமன்றத்தில் ஆஜரான சுற்றுச்சூழல் செயலர் சுப்ரியா சாஹூவிடம் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.
தமிழகத்தில் எப்பொழுது, எதற்காக சீமை கருவேல மரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன என்பதை தலைமை நீதிபதி அறிய விரும்பியபோது, முன்னாள் முதல்வர் காமராஜரின் ஆட்சிக் காலத்தில் மாநிலத்தில் வறண்ட தரிசு நிலங்கள் பசுமையாக மாற உதவும் வகையில் சீமை கருவேல மரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், வனப் பகுதிகளில் சீமை கருவேலம் அதிக அளவில் வளர்ந்து மற்ற உயிரினங்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது என்று சுப்ரியா சாஹு நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும், வனப்பகுதிகளில் யானைகள் போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் தடைபடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், சில தொழிற்சாலைகள் சீமை கருவேலத்தை விறகாகப் பயன்படுத்துவதாகக் கூறிய சுப்ரியா சாஹூ, பலரின் வாழ்வாதாரம் இந்த மரங்களை நம்பியிருப்பதால், சீமை கருவேல மரங்கள் படிப்படியாக அழிக்கப்பட வேண்டும் என்றார்.
அப்போது, தொழிற்சாலைகளில் சீமை கருவேல மரங்கள் விறகாகப் பயன்படுத்தப்படுவது குறித்து தனக்குத் தெரியும் என்று கூறிய தலைமை நீதிபதி, தொழில்துறை லாபிக்கு அடிபணிய வேண்டாம் என்று அதிகாரிகளை எச்சரித்தார். மேலும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது முதன்மையான அக்கறையாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-govt-says-project-of-eradicating-seemai-karuvelam-committed-412609/