15 2 2022 தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள், முன்கூட்டியே வெளியான விவகாரத்தில், குற்றவாளிகள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 9ம் தேதி முதல் திருப்புதல் தேர்வுகள் நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டியுள்ளது.
இதில், சில தேர்வுகளுக்கான வினாத்தாள் தேர்வு நடைபெறும் முன்பே சமூக வலைத்தளங்களில் வெளிவந்தது தொடர்பாக விரிவான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வில், திருவண்ணமலை மாவட்டம் போளூரில் உள்ள ஆக்சிலியம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் வந்தவாசியில் உள்ள ஹாசினி இன்டர்நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளில் இருந்து வினாத்தாள் வெளியானது கண்டறிப்பட்டதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதற்கு காரணமான பள்ளிகளைச் சேர்ந்த நபர்களின் மீது தக்க குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், தேர்வுகள் தொடர்பாக தேர்வுத்துறை அளித்த வழிகாட்டுதல்களை சரியாக பின்பற்றாத அரசு அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, ஏற்கனவே வெளியிடப்பட்ட அட்டவணையின்படி, திருப்புதல் தேர்வுகள் எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்து நடைபெறும் என்றும் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
source https://news7tamil.live/10th-12th-question-paper-issue-school-education-department-action.html