22 2 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெளியாகி உள்ள நிலையில், திமுக, அதிமுக ஆகிய பெரியக் கட்சிகளுக்கு அடுத்து தேசியக் கட்சியான காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்ற 3வது பெரிய கட்சியாக நிரூபித்துள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 18 இடங்களில் வெற்றி பெற்றது. அதே போல, மத்தியில் ஆளும் மற்றொரு தேசியக் கட்சியான பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்றது. சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு, பாஜக தலைவர்கள் தமிழகத்தில் பாஜகதான் எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.
மக்களவைத் தேர்தல், சட்டமன்றத் தேர்தலைப் போலவே, காங்கிரஸ் கட்சி திமுக தலைமையிலான கூட்டணியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை சந்தித்தது. பாஜக, அதிமுக கூட்டணியில் இருந்து விலகி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட்டது.
இந்த சூழலில், தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கிறது. தேர்தல் முடிவுகளில் திமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. திமுக கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ் கட்சி பாஜகவை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 7 மணி நிலவரப்படி மாநிலத் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட முடிவுகளின்படி, 21 மாநகராட்சிகளில் 70 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. நகராட்சி வார்டுகளில் 151 இடங்களிலும், பேரூராட்சி வார்டுகளில் 368 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
பாஜக மாநகராட்சி வார்டுகளில் 22 இடங்களிலும் நகராட்சி வார்டுகளில் 56 வார்டுகளிலும் பேரூராட்சிகளில் 230 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
தமிழக அரசியலில், திமுக, அதிமுகவுக்கு அடுத்து பாஜகதான் பெரிய கட்சி என்று அக்கட்சி தலைவர்கள் கூறி வந்த நிலையில், இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பாஜகவை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று 3வது பெரிய கட்சியாக நிரூபித்துள்ளது.
source : https://tamil.indianexpress.com/tamilnadu/congress-prove-in-local-body-polls-as-3rd-biggest-party-than-bjp-in-tamil-nadu-415314/