வியாழன், 24 பிப்ரவரி, 2022

தமிழக ‘பெங்களூரு’வாக மாறும் ஓசூர்: அரசு குறிவைக்கும் 4,000 ஏக்கர் நிலம்; முதலீடுகளை குவிக்கத் திட்டம்

 தமிழக-கர்நாடக எல்லையில் அமைந்துள்ள ஓசூரில் 4,000 ஏக்கர் நிலம் வாங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

ஐடி நிறுவனங்களை அதிகம் கொண்டுள்ள நகரமாக கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு திகழ்கிறது.

இந்தியா முழுவதும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் நகராகவும் பெங்களூரு இருந்து வருகிறது. இதன்மூலம் கர்நாடக மாநிலத்துக்கான வருவாயும் பெருகி வருகிறது.

நமது மாநிலத்தைப் பொறுத்தவரை சென்னை, கோவை ஆகிய நகரங்களில் ஐடி உள்ளிட்ட பெருநிறுவனங்கள் உள்ளன. ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருகின்றன.

இந்நிலையில், கர்நாடக எல்லையில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஓசூரில் தொழில்சாலைகளை கொண்டு வருவதற்காக 4,000 ஏக்கர் நிலம் வாங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

ஒசூர் என்றாலே டாடா மற்றும் ஓலா நிறுவனங்கள் நினைவுக்கு வரும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக இந்நிறுவனங்களை போன்றே பல நிறுவனங்கள் ஓசூர் நகரில் கால் பதிக்க ஆர்வம் காட்டி வருகின்றன.

இதன்காரணமாக அரசே நிலத்தை வாங்கி நிறுவனங்களுக்கு விற்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஒசூர் அருகே உள்ள சூலகிரியில் 1,000 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு வாங்கியுள்ளது. அருகில் உள்ள கிராமங்களில் இருந்து மேலும் 3,000 ஏக்கர் நிலத்தை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டன. இந்தப் பகுதி நல்ல வளர்ச்சியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஓசூரில் டைட்டன், டிவிஎஸ் மோட்டார்ஸ், ஸ்ரீ வாரு மோட்டார், அதெர், சிம்பில் எனர்ஜி உள்ளிட்ட நிறுவனங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஓசூர் சிறு குழு தொழில் சங்கமும் மாநில அரசின் முடிவுகளை வரவேற்றுள்ளது.  

மாநில அரசின் இந்த முயற்சியால் சுமார் 25,000 கோடி முதலீட்டை ஈர்க்க முடியும், இதன்மூலம் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

source https://tamil.indianexpress.com/business/tamilnadu-govt-plans-to-buy-lands-in-hosur-near-bangalore-415190/