16 2 2022
Tamilnadu urban local body election campaign end 6pm on feb 17: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரம் பிப்ரவரி 17ஆம் தேதி (நாளை) மாலை 6 மணியுடன் நிறைவடையும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 139 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளில் கவுன்சிலர்களை தேர்வு செய்வதற்காக பத்தாண்டுகளுக்கு பிறகு நடக்கிறது.
இதில் வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளான பிப்ரவரி 7-ம் பல வார்டுகளில் போட்டியிட்டவர்கள் தங்கள் வேட்பு மனுவை திரும்ப பெற்றதால் 218 பேர் போட்டியின்றி கவுன்சிலர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனையடுத்து மீதமுள்ள, 21 மாநகராட்சிகளில் 1,374 வார்டுகளில் 11,196 வேட்பாளர்களும், 138 நகராட்சிகளில் 3,843 வார்டுகளில் 17,922 வேட்பாளர்களும் மற்றும் 490 பேரூராட்சிகளில் 7,609 வார்டுகளில் 28,660 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
மாநகராட்சிகளில் மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கும், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கும் மார்ச் 4 ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 2.79 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில், சென்னை மாநகராட்சியில் மட்டும் 61.18 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 30.23 லட்சம் ஆண் வாக்காளர்களும், 30.93 லட்சம் பெண் வாக்காளர்களும், 1,576 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர்.
இந்தநிலையில், தேர்தல் பிரச்சாரம் நாளை (பிப்ரவரி 17) மாலை 6 மணியுடன் நிறைவடைவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
எனவே அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் வசிப்பவர்களைத் தவிர, வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் பிரச்சாரம் முடிந்ததும் உடனடியாக அந்தப் பகுதிகளை விட்டு வெளியேற வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், இதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
இதற்கிடையில், வார்டு வாரியான முக்கிய மற்றும் துணை வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் தனது இணையதளமான https://tnsec.tn.nic இல் வெளியிட்டுள்ளது. வாக்காளர்கள் தங்களுக்கான வாக்குச் சாவடிகளை மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திற்குச் சென்று தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை வழங்குவதன் மூலமும் அறிந்து கொள்ளலாம். தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க ஏதுவாக தொகுதி பார்வையாளர்களின் பெயர்கள் மற்றும் மொபைல் எண்களையும் மாநில தேர்தல் ஆணையம் அளித்துள்ளது.
இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி 268 மையங்களில் நடைபெறும்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-urban-local-body-election-campaign-end-6pm-on-feb-17-412035/