15 3 2022 தமிழ்நாட்டில் மிகப்பெரிய புத்தக பூங்கா உருவாக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் 2021-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழறிஞர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் அய்யன் திருவள்ளுவர் விருது மறைந்த மு.மீனாட்சி சுந்தரத்திற்கும், பேரறிஞர் அண்ணா விருது பேச்சாளர் நாஞ்சில் சம்பத்துக்கும் வழங்கப்பட்டது. பாவேந்தர் பாரதிதாசன் விருது புலவர் செந்தலை ந.கவுதமனுக்கும், சொல்லின் செல்வர் விருது அரசியல் விமர்சகர் சூர்யா சேவியருக்கும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, இளங்கோவடிகள் விருது இலக்கிய சொற்பொழிவாளர் நெல்லை கண்ணனுக்கும், மறைமலையடிகளார் விருது ஆன்மிக சொற்பொழிவாளர் சுகி சிவத்திற்கும் வழங்கப்பட்டது. முதலமைச்சர் கணினித் தமிழ் விருது முனைவர் வ. தனலட்சுமிக்கும், தந்தை பெரியார் விருது பெரியாரிய ஆய்வாளர் க.திருநாவுக்கரசுவுக்கும் வழங்கப்பட்டது.
பின்னர், பெருந்தலைவர் காமராசர் விருது முனைவர் குமரி அனந்தனுக்கும், முத்தமிழ்க்காவலர் சி.ஆ.பெ. விசுவநாதம் விருது மேனாள் துணைவேந்தர் முனைவர். ம.ராசேந்திரனுக்கும் வழங்கப்பட்டது. ஜி.யு.போப் விருது அ.சு.பன்னீர் செல்வனுக்கும், தேவநேயப் பாவாணர் விருது முனைவர் கு. அரசேந்திரனுக்கும் வழங்கப்பட்டது. தொடர்ந்து அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது முனைவர் இரா. சஞ்சீவிராயருக்கும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் திங்களிதழ் விருது உயிர்மை திங்களிதழின் ஆசிரியர் மனுஷ்யபுத்திரனுக்கும் வழங்கப்பட்டது.
அண்மைச் செய்தி: தமிழ்நாட்டில் சாம்சங் நிறுவனம் – முதலமைச்சர் முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம்
இதேபோல, அண்ணல் அம்பேத்கர் விருது சென்னை உயர்நிதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துருவுக்கும், மகாகவி பாரதியார் விருது பாரதி கிருஷ்ணகுமாருக்கும் வழங்கப்பட்டது. கம்பர் விருது பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கருக்கும், உமறுப்புலவர் விருது நா. மம்மதுவுக்கும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, சிங்காரவேலர் விருது கவிஞர் மதுக்கூர் இராமலிங்கத்திற்கும், அயோத்திதாசப் பண்டிதர் விருது ஞான. அலாய்சியஸ்-க்கும் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தமிழ்த்தாய் விருது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு வழங்கப்பட்டது.
அப்போது, நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழுக்கும் அமுதென்று பேர் என்ற பாரதிதாசனின் வரிகளை மேற்கோள்காட்டி உரையாற்றினார். தமிழ் மொழி 3 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையானது என்பதை மெய்ப்பிக்கும் வகையில் தற்போதைய ஆய்வுகள் வெளிப்பட்டு வருவதாக கூறினார். இனி வரும் காலங்களில் ஆண்டுதோறும் ஜூன் 3-ம் தேதி முதல் முத்தமிழறிஞர் கலைஞர் செம்மொழி தமிழ் விருதுகள் 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையுடன் வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் தமிழ்நாட்டில் மாபெரும் புத்தக பூங்கா அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
source https://news7tamil.live/largest-book-park-to-be-set-up-in-tamil-nadu-chief-ministers-announcement.html