சனி, 4 ஏப்ரல், 2020

கொரோனாவால் வாடிப்போன மலர் சாகுபடி!

எத்தனை வாசமான மலர்களகாக இருந்தாலும், வாடிப்போவதுதான் அவற்றின் இயல்பு... ஆனால், தற்போது பூக்களை மட்டுமே நம்பியிருக்கும் மக்களின் வாழ்க்கையும், கொரோனாவால் வாடிப்போயிருக்கிறது.
ஆயிரக்கணக்கான ஏக்கரில் பரந்து விரிந்து கிடக்கும் பூந்தோட்டங்கள்... அழகிய பூக்கள் எல்லாம் கருகிய பூக்களாய் காட்சியளிக்கும் இந்த இடம், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த திருவரங்கப்பட்டி. சுமார் 1,000 வீடுகளைக் கொண்ட இந்த கிராமத்தில், 500க்கும் அதிகமான குடும்பத்தினர் மலர் சாகுபடி மற்றும் அது சார்ந்த தொழில்களையே செய்து வந்தனர். ஆனால், கொரோனா அவர்களின் ஒட்டுமொத்த தொழிலையும் முடக்கிப் போட்டுள்ளது.
கோயில் விழாக்கள், திருமண அலங்காரங்கள் என, அனைத்து விழாக்களுக்கும் மலர்கள் மற்றும் மலர் மாலைகளின்றி நடைபெறுவதில்லை. ஆனால், கொரோனாவால்
பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், மலர் பறிக்கவும் முடியவில்லை, பறித்த மலர்களை மாலையாக்கவும் முடியவில்லை. வேலை செய்ய முடியாததால், சோறுக்கும் இனி சிரமம்தான் என்கின்றனர் அந்த கிராம மக்கள்.
தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் மல்லிகை, உச்சிப் பூ, செவ்வந்தி என,
அனைத்து பூக்களையும், அதிகாலை 4 மணிக்கே பறித்து, அதை மாலையாக்கி, ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர் போன்ற நகர்ப்புற பகுதிகளுக்கு கொண்டு சென்றால் மட்டுமே இவர்களுக்கு வருமானம். அதுவும், அதிகபட்சமாக ஒரு நாளுக்கு 300 ரூபாய் வரைதான் கிடைக்கும். 
இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை, இந்த கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோருக்கு வருமானம் கொடுத்து வந்த மலர் தொழில், தற்போது அடியோடு நின்றுபோனது. திடீரென இப்படி ஒரு நிலை ஏறப்டும் என கொஞ்சமும் நினைத்துப் பார்க்கவில்லை என்கின்றனர் இப்பகுதி பூ வியாபாரிகள்
மலர்களை பறிக்காமல் செடிகளில் விட்டு விட்டால், செடிகள் நாசமாகி விடும் என கூறும் விவசாயிகள், அதன் காரணமாக, அவற்றை பறித்து, அங்கேயே கொட்டி விடுவதாக ஆதங்கம் தெரிவிக்கின்றனர். வாசமான பூக்களை நம்பியிருக்கும் மக்களின் வாழ்க்கை, தற்போது மோசமான நிலையில் இருக்கிறது என்பதே சோகமான உண்மை...
credit ns7.tv