சனி, 4 ஏப்ரல், 2020

டெல்லி தப்லிக் ஜமாத் மாநாடு ஏன் பேசு பொருளாக மாறியது?

டெல்லியில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் மாநாடு தான் இன்று பேசு பொருளாக உருவெடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் ஒரு கணிசமான தொகை டெல்லி மாநட்டில் பங்கேற்றர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
தப்லிக் ஜமாத்...கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் உச்சரிக்கப்படும் பெயர்...இந்தியாவின் கொரோனா பாதிப்பிற்கு இந்த அமைப்பால் நடத்தப்பட்ட மாநாடுதான் காரணம் என்ற குற்றச்சாட்டை எழுப்பி கொண்டிருக்கிறது சமூகத்தின் ஒரு தரப்பு. 
ட்விட்டரில் CORONO JIHAD, ISLOMOPHOPIA என்றெல்லாம் ஹேஷ்டேக்குகள் டிரெண்ட் ஆனது. கொரோனாவை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை தப்லிக் ஜமாத் என கருத்து தெரிவித்தது விஷ்வ ஹிந்து பரிசத், உண்மையில் இந்தியாவில் கொரோனா பரவலுக்கு தப்லிக் ஜமாத்தான் காரணமா என்பதை ஆராய வேண்டியுள்ளது.
தப்லிக் ஜமாத்தை ஒரு தரப்பினர் குறிவைக்கப்பட காரணமாக அமைந்தது, தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் ஏற்பட்ட தாக்கம்தான். டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட இந்த மாநிலங்களைச் சேர்ந்த பெரும்பாலானவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக வெளியான தகவல்தான் டெல்லி மாநாட்டை பற்றி விவாவதிக்க காரணமாக இருந்தது. ஆனால், அதனை தாண்டி இந்திய அளவில் கொரோனா தொற்று குறித்த புள்ளி விபரங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு ஆராய வேண்டியது கட்டாயமாகிறது.  
photo
இந்தியாவில் இன்று அதாவது ஏப்ரல் 3ம் தேதி காலை 9 மணிக்கு மத்திய சுகாதரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,301. இதில் தப்லிக் ஜமாத் நடத்திய மாநாட்டில் பங்கேற்றவர்கள் சுமார் 400 பேர் மட்டுமே. அதாவது தப்லிகி ஜமாத் மாநாட்டை விடுத்து பார்த்தால் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,900.
இன்று ஒரே நாளில் உத்தரபிரதேசத்தில் 172 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் 40 பேர். அதாவது மாநாடு நீங்கலாக, 132 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
ராஜஸ்தானில் இதுவரை 154 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 23 பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள். குஜராத் மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றிற்கு 87 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் ஒருவர் கூட டெல்லி மாநாட்டோடு தொடர்புடையவர்கள் அல்ல. கேரளாவில் சுமார் 300 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 2 பேர் மட்டுமே தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்.
இந்த விபரங்கள் சொல்லும் செய்தி ஒன்று மட்டுமே. கொரோனா என்பது மக்கள் கூட்டமாக கூடினால் எளிதில் பரவும். அந்த வகையில் டெல்லி மாநாடும் ஒரு காரணமாக மாறி இருக்கிறது. ஆனால் இந்தியாவில் ஒட்டு மொத்தமாக கொரோனா பரவ டெல்லி மாநாடுதான் காரணம் என்ற ரீதியில் தகவல்கள் பரப்பப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதே இஸ்லாமியர்கள் தரும் விளக்கம். இந்த விவகாரம் வெளியானதுமே, தப்லிக் ஜமாத் அளித்த விளக்கம் மிக முக்கியமானது. 
photo
டெல்லி மாநாடு என்பது சுமார் 6 மாதங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்ட நிகழ்வு என்றும், மாநாடு தொடங்கிய போது மத்திய, மாநில அரசுகள் கட்டுப்பாடு எதையும் விதிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லி சென்றவர்கள் 2 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து பெயணம் மேற்கொண்டுள்ளனர்.
22ம் தேதியன்று மக்கள் ஊரடங்கு என்பதை பிரதமர் அறிவித்ததும், ஜமாத்தில் இருந்து பலர் ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். ஊர் திரும்ப முடியாதவர்கள் ஜமாத்திலேயெ தங்கி விட்டதாகவும் அந்த அமைப்பின் நிர்வாகிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
அவர்களாகவே முன் வந்து சோதனை செய்து கொள்வது மட்டும் தான் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் செய்ய வேண்டிய ஒரே ஒரு முக்கிய விவகாரம். 
தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதனை செய்து விட்டதாகவே தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் அறிவித்ததை இங்கே நினைவு கூற வேண்டியுள்ளது. டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உண்மைதான். ஆனால் ஒட்டு மொத்த பழியையும் குறிப்பிட்ட தரப்பினரின் மேல் போடுவதா என்ற கேள்வியில் இருக்கும் நியாயம் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.