செவ்வாய், 10 மே, 2022

தீவிர புயலாக வலுப்பெற்ற அசானி… தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

 

வங்கக் கடலில் புதிதாக உருவாகியிருந்த அசானி புயல், தீவிர புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஐஎம்டி வெளியிட்ட புயல் நகர்வு தடத்தின்படி, வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசாவை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் செவ்வாய்கிழமை புயல் மையம் கொள்ளும். புயல் கரையைக் கடக்க வாய்ப்பில்லை, அடுத்த இரண்டு நாட்களில் மாநிலங்களின் கடலோர மாவட்டங்களைத் தாக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கடந்த 2 நாள்களாக புயல் கடலில் மையம் கொண்டிருக்கையில் மிக விரைவாக தீவிரதன்மையை அடைந்தது.

இந்திய வானிலை மையம் நேற்று மாலை 5.30 மணி கண்காணிப்பின்படி, புயல் மணிக்கு 14 கிமீ வேகத்தில் நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. புயல் அந்தமான் நிகோபாருக்கு வடமேற்கே 610 கிமீ தொலைவிலும், போர்ட் பிளேயருக்கு மேற்கே 500 கிமீ தொலைவிலும், விசாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 810 கிமீ தொலைவிலும், பூரிக்கு தென்-தென்கிழக்கே 880 கிமீ தொலைவிலும் மையம் கொண்டிருந்தததாக தெரிவிக்கப்பட்டது.

ஒடிசா, மேற்கு வங்கம் உஷார் நிலை

செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் கனமழை கணிப்பை முன்னிட்டு ஒடிசாவில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் மே 12-ம் தேதி வரை இடி, மின்னல் மற்றும் லேசான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கு வங்கத்தில், பேரிடர் மேலாண்மை குழுக்கள், போலீசார் மற்றும் கேஎம்சி ஊழியர்கள் தயார் நிலையில் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. SDRF மற்றும் NDRF, கடலோர காவல்படை மற்றும் கடற்படையினரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

அசானி புயல் காரணமாக தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 11 மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/asani-intensify-into-severe-cyclone-451395/