பஞ்சாப் மாநிலத்தின் மொஹாலியில் உள்ள காவல்துறை உளவுப்பிரிவு தலைமை அலுவலகத்தின் மீது நேற்று மாலை ராக்கெட் மூலம் இயக்கப்படும் கையெறி குண்டு வீசப்பட்டதாக மூத்த அதிகாரி ஒருவர், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸூக்கு தெரிவித்தார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பஞ்சாப் டிஜிபி வீரேஷ் குமார் பவ்ரா, தாக்குதல் நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பேசிய அவர், இரவு 7.45 மணியளவில் நடந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
தாக்குதலை உறுதிப்படுத்திய மூத்த அதிகாரியின் கூற்றுப்படி, அலுவலகத்தின் ஜன்னல் மீது விழுந்த வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. ஜன்னல் கண்ணாடிகள் சுக்குநூறாக நொறுங்கின.
வாகனத்தில் தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், மெயில் வாசலில் இருந்து அலுவலகத்தை நோக்கி ஆர்பிஜி தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல் நடைபெற்ற சமயத்தில், அங்கிருந்து கார் செல்வதை காண முடிந்தது என்றார்.
ஆர்பிஜி என்றால் ராக்கெட் மூலம் இயக்கப்படும் லான்ஞசர் வகை ஏவுகணை ஆகும். பொதுவாக டாங்கி போன்றவற்றை அழிக்கவே ஆர்பிஜி ஏவுகணைகள் பயன்படுத்தப்படும். தாக்குதலுக்கு பயன்படுத்திய ஏவுகணையில் குறிப்பிட்டிருந்த லாட் எண்ணின் படி, அந்த ஆயுதம் சீனாவில் தயாரிக்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாக்குதலை தொடர்ந்து, அப்பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வெடிகுண்டு நிபுணர்களும், தடவியல் நிபுணர்களும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த கட்டிடத்தில் ஐஜி பதவியில் உள்ளவர்கள் உட்பட பல மூத்த அதிகாரிகளின் அலுவலகங்கள் உள்ளன.
அடையாளம் தெரியாத நபர்களை கண்டறிய, அலுவலகத்தை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளிலும் காவல் துறையினர் தேடுதல் வேட்டையில் உள்ளனர்.
ஏப்ரல் 24 அன்று சண்டிகரில் உள்ள புரைல் சிறைக்கு அருகே வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.
இச்சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த பல அரசியல் தலைவர்கள், குற்றவாளிகளை உடனடியாக பிடித்திட வலியுறுத்தினர்.
source https://tamil.indianexpress.com/international/mahinda-rajapaksa-residence-in-kurunegala-set-on-fire-451814/