உணவினால் ஏற்படும் தொற்றுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சிவகங்கை அரசு பொது நல மருத்துவர் டாக்டர் அ.ப. ஃபரூக் அப்துல்லா தனது முகநூலில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டாக்டர் அ.ப. ஃபரூக் அப்துல்லா பதிவிட்டுள்ள பதிவில், ‘ஷவர்மா சாப்பிட்டு மாணவி பலி, பிரியாணி சாப்பிட்டு இளம்பெண் பலி இப்படியெல்லாம் செய்திகள் வரும் போது, நிச்சயம் இதைப் படிக்கும் பொது மக்களுக்கு ஷவர்மா ஏதோ உயிரைக் கொல்லும் விசயம் போன்றும் பிரியாணி சாப்பிட்டாலே பிரச்சனை தான் என்பது போலும் நினைக்கின்றனர். ஆனால், இந்த உணவுப் பதார்த்தங்கள் மீதோ அதன் செய்முறை மீதோ அதில் சேர்க்கப்படும் சேர்மானங்கள் மீதோ எந்த பிரச்சனையும் இருப்பதில்லை.
மாறாக மனிதர்கள் நாம் கொண்டிருக்கும் அதீத பேராசை காரணமாக ஒரு நாள் மிஞ்சும் சமைக்கப்பட்ட உணவை அப்படியே அடுத்த நாளைக்கு கொண்டு சென்று விற்க நினைக்கும் சில மனிதர்களால் தான் இந்த உணவுப் பட்சணங்கள் கெட்ட பெயரை வாங்குகின்றன. அதிலும் மாமிசம் சேர்த்து சமைக்கப்படும் உணவுகளை அன்றன்றே சாப்பிடும் போது எந்த பிரச்சனையும் இல்லை. மாறாக அவற்றை அடுத்த நாள் கொண்டு செல்லும் போது நோய் கிருமிகள் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம். அதிலும் மாமிசத்தை முறையாகப் பேண வேண்டிய குளிர் நிலையில் பேணாமல் போனால் ஆபத்தான கிருமிகள் தொற்றும் வாய்ப்பு உண்டு. தற்போது கோடை காலத்தில் மின் தடை ஏற்படுவதால் நம்மால் கூட நமது குளிர்சாதனப்பெட்டியின் குளிர் நிலையை சரிவர பராமரிப்பது கடினமாகி விடும். எனவே நாம் உண்ணும் உணவை நன்றாக சமைத்து உண்ண வேண்டும்.
அதிலும் மாமிசம் சேர்க்கப்பட்ட உணவுகள் நன்றாக சமைக்கப்பட வேண்டும். சேமித்து வைக்க வேண்டும் என்றால் முறையான குளிரில் பராமரிக்க வேண்டும். கடைகளில் வாங்கி உண்ண வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் நல்ல தரமான உணவை தயார் செய்து விற்கும் கடைகளில் கொஞ்சம் பணம் அதிகம் செலவானாலும் பரவாயில்லை என்று வாங்கி உண்ண வேண்டும். உண்ணும் கடைகளை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்கலாகாது. ஒரு இடத்தில் தவறு நேர்ந்து விட்டதால் அனைவரையும் தவறானவர்களாக நினைத்து விட முடியாது. அதே சமயம் நாம் உணவு உண்ணும் இடத்தின் தரத்தை சிறிதாவது ஆய்வு செய்து உண்ண வேண்டியது நமது கடமை.
உணவு செய்யப்பட்ட விதம் அதை பராமரித்த விதம் போன்றவற்றில் ஏற்படும் கோளாறுகளால் இது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. மாறாக ஷவர்மா மற்றும் பிரியாணி போன்ற உணவுப் பொருட்கள் மீது எந்த பிரச்சனையுமில்லை. உணவினால் ஏற்படும் நோய் உண்டாகுமானால் சுய மருத்துவம் செய்து காலம் தாழ்த்தாமல் மருத்துவ உதவியை நாடுவது உயிரைக் காக்கும். வாந்தி பேதி போன்றவை ஏற்பட்டால் கால தாமதம் செய்யாமல் சிகிச்சை பெறுவது அவசியம்.
தீவிர பாக்டீரியா தொற்று ஏற்படுமாயின் அதற்குண்டான ஆண்டிபயாடிக் மருந்துகளை உடனே வழங்கிடுவது அவசியம். கூடவே அதீத நீரிழப்பையும் தாது உப்புகளின் மாறுபாட்டையும் சரி செய்ய ரத்த நாளம் வழி திரவங்கள் ஏற்றுவதும் அவசியம். இயன்றவரை வீட்டில் சமைத்து உண்போம். வெளியில் உணவு உண்ணும் இடத்தைத் தேர்ந்தெடுத்து உண்போம். உணவினால் ஏற்படும் தொற்றுகளுக்கு உடனடியாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுப்போம்’ என அவர் தனது விழிப்புணர்வு பதிவில் தெரிவித்துள்ளார்.
- டாக்டர் அ.ப. ஃபரூக் அப்துல்லா, அரசு பொது நல மருத்துவர், சிவகங்கை.